ஆண்டுக்கு 400 கிலோ... வறண்ட பூமியிலும் பாக்கு சாகுபடி... நம்பிக்கை அளிக்கும் விவசாயி!
சில பயிர்கள், குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே நன்கு வளரும் திறன் கொண்டவை. அந்த வகையில் பாக்கு சாகுபடி பெரும்பாலும் மலை பகுதிகள் மற்றும் மலை அடிவார பகுதிகளில் குளிரும், வெப்பநிலையும் ஒருங்கே கொண்ட மிதமான வெப்பநிலையில் நிலையில் நன்கு வளரும் பயிராக அறியப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, வறண்ட பகுதியில் பாக்கு மரங்களை வளர்த்து மகசூல் எடுத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் கங்கலா என்பவர், காவலர் பணியோடு ஆத்ம திருப்திக்காக விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார். கோல்ஹார் தாலுகா, கரசங்கி என்ற கிராமம்தான் கங்கலாவுடையது. இவர், 22 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இருந்தாலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் இவர் விவசாயம் செய்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.
இருப்பினும், வறட்சியை வெற்றிகரமாக எதிர்கொண்டு விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் சோளம், கரும்பு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்வதோடு எஞ்சிய நிலத்தில் பழங்களும் சாகுபடி செய்து வருகிறார். குறிப்பாக சீதாப்பழம், மா, பலா உள்ளிட்டவை இதில் அடங்கும். இதுதவிர, தனது வறண்ட நிலத்தில் பாக்கு தோட்டத்தையும் அமைத்து அதில் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்.
பாக்கு மரங்கள் என்பது மலைப்பாங்கான பகுதிகளில் தான் அதிகம் வளரும். அதுவும் தென்னைக்கு மாற்றாக விவசாயிகளின் முதன்மைத் தேர்வாக இருப்பது பாக்கு சாகுபடி. தண்ணீர் அதிகம் தேவைப்படும் சூழலில், விவசாயி கங்கலாவோ, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் பாக்கு சாகுபடி செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
வெற்றிகரமான வேளாண் தொழில்நுட்பங்கள், புதுமையான பாசன உத்திகள், முறையான பராமரிப்பு என சில விஷயங்களை கையாண்டதால் கங்கலாவுக்கு பாக்கு சாகுபடி பலனை கொடுத்துள்ளது. ஆண்டுக்கு, ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ பாக்கு அறுவடை செய்து வருகிறார். தோராயமாக, 100 கிலோ எடை கொண்ட பாக்கு மூட்டை 53,000 ரூபாய் முதல் 55,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, ஏக்கருக்கு 2-லிருந்து 3 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார். மொத்தமுள்ள பாக்கு தோட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10-லிருந்து 11 லட்சம் வரை வருமானம் பார்த்து வருகிறார்.
பாக்கு சாகுபடி குறித்த அனுபவங்களை விவசாயி கங்கலா பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், "எங்கள் மாவட்டமான விஜயபுராவில் பொதுவாக வெயில் அதிகம். அதனால் எப்போது வறண்ட நிலையே நிலவும். இருந்தாலும் நம்பிக்கையோடு பாக்கு சாகுபடியை மேற்கொண்டேன். பாக்கு மரக்கன்றுகள் நடும்போது, ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே 9 அடி இடைவெளி விட்டால், ஒரு ஏக்கரில் 500 கன்றுகளை நடவு செய்ய முடியும்.
பாக்கு மரங்களுக்கு நான் இயற்கை உரம்தான் பயன்படுத்துகிறேன். இயற்கை உரத்தை பயன்படுத்துவதால், மண் வளமாக இருக்கிறது. இத்துடன் சீரிய இடைவெளியில் களைகளை அகற்றி வருகிறேன்.
எனது வயலில் 4 ஆழ்துளைக் கிணறுகள், 2 கிணறுகள் உள்ளன. எனினும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், குறைந்தளவு தண்ணீர் பயன்படுத்தும் வகையில், சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றி வருகிறேன். கால்வாய்களை வெட்டி, அதில் குழாய்கள் பதித்து மரங்களுக்கு அருகிலேயே தண்ணீர் விழுமாறு பாசனம் செய்து வருகிறேன்.
இதனால் வெயில் காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. அதே நேரம், உள்ளூர் சந்தையில் பாக்கு விற்பனைக்கு விலை குறைவாக கிடைக்கிறது என்பதால், சென்னகிரி பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


