மதிமுக பிரமுகர் மகன் கொலை; கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது - இடத்தகராறில் நேர்ந்த சோகம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆஸ்பத்திரி தெருவை சேந்தவர் ’தீபம்’ மோகன். இவர் மதிமுக நகரச் செயலாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ்நாடு ஹோட்டல் தேநீர் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி தலைவராகவும் இருக்கிறார். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தீபம் என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவருடைய மகன் அருள் பிரகாஷ் (48) பேக்கரியை கவனித்து வந்தார். இவருக்கு மனைவி மற்று மகள் உள்ளனர். இடம் தொடர்பாக ஆறுமுகம் மகன் ஸ்ரீராம்(20) என்பவருக்கும், மோகனுக்கு பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சர்வேயர் இடத்தை அளக்க இருந்த நிலையில் முன்கூட்டியே மோகன் சென்று அந்த இடத்தை அளந்துள்ளார். இது ஸ்ரீராமுக்கு தெரிய வர தனது பெரியப்பா முருகேசனின் மகன் விக்னேஸ்வரனை (28) ஸ்ரீராம் அழைத்து சென்று மோகனுடன் வாக்கு வாதம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மோகன் தன் மகன் அருள் பிரகாஷை போன் செய்து அழைக்க அவரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது இரு தரப்புக்கும் வாக்கு வாதம் அதிகரித்துள்ளது. இதில் ஸ்ரீராம், விக்னேஸ்வரன் இருவரும் அந்த இடத்தில் கிடந்த கருங்கல்லை எடுத்து அருள் பிரகாஷின் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்த வெளத்தில் சரிந்து விழுந்தவரை மோகன் உள்ளிட்டோர் தூக்கி கொண்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூளைச்சாவு அடைந்த நிலையில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையிலிருந்த அருள் பிரகாஷ் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அருள் பிரகாஷை கொலை செய்த வழக்கில் ஸ்ரீராம், விக்னேஸ்வரன் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இடப்பிரச்னையில் ம.தி.மு.க பிரமுகர் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் உள்ள மோகனுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வாடகைக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. அதனால் அந்த இடத்தை பழைய போலீஸ் ஸ்டேஷன் இடம் என்றே இப்போதும் சொல்வார்கள்.
அந்த இடத்தின் அருகே ஸ்ரீராமின் தந்தை ஆறுமுகம் லேத் பட்டறை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில், பட்டரையை ஸ்ரீராம் கவனித்து வந்தார். மோகன் தன் இடத்தில் சில அடிகள் லேத் பட்டரை இடத்தில் இருப்பதாக கூறி வந்துள்ளார். இதனால் ஸ்ரீராம் தரப்புக்கும், மோகனுக்கும் பிரச்னை இருந்துள்ளது. நில அளவை பிரிவு மூலம் சர்வேயரை வைத்து அளந்து பிரச்னையை சரி செய்து கொள்ள சிலர் யோசனை கூறியுள்ளனர். நிலத்தை அளப்பதற்காக பணம் கட்டியிருந்த நிலையில் நேற்று நிலத்தை அளக்க இருந்தனர்.

இதைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மோகன் மட்டும் லேத் பட்டரை பக்கம் சென்று முன்கூட்டியே அளந்துள்ளார். இதையறிந்து ஸ்ரீராம் வந்த போது தான் வாக்கு வாதம் பிரச்னையாக மாறி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்த அருள் பிரகாஷ் எந்த வம்பு, தும்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பவர். அவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


