மகாராஷ்டிரா: செவிலியரைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் - தொடரும் கொடூரங்கள்..!

மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமை தொடர் கதையாகி வருகிறது. மும்பை அருகே இரண்டு மைனர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆசிரம பள்ளியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இப்போது பயிற்சி செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். ரத்னகிரியைச் சேர்ந்த 19 வயது பயிற்சி செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் அவருக்கு ஆட்டோ டிரைவர் குடிக்க தண்ணீர் கொடுத்தார். அந்த தண்ணீரை குடித்த செவிலியர் ஆட்டோவில் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆட்டோவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்ற டிரைவர், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். மயக்கம் தெளிந்த செவிலியர் நடந்த சம்பவத்தை அறிந்து தனது பெற்றோருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

இச்சம்பவத்தால் குற்றவாளியை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி ரத்னகிரியில் செவிலியரின் உறவினர்களும், மருத்துவமனை செவிலியர்களும் சேர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் செவிலியருக்கு குடிக்க கொடுத்த தண்ணீரில் மயக்க மருந்து கலந்திருந்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் டாக்டர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாக்டர் மீது தாக்குதல்!

ஆந்திராவில் பெண் டாக்டரை நோயாளி தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் இச்சம்பவம் நடந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், ``நான் எதிர்பாராத நேரத்தில் எனது பின்புறமாக வந்த நோயாளி பங்காரு, எனது தலை முடியைப் பிடித்து அங்கிருந்த கட்டில் இரும்பு கம்பி மீது மோதச் செய்தார். அருகில் நின்ற பாதுகாவலர்கள் மற்றும் சக டாக்டர்கள் எனக்கு உதவினர். அந்நேரம் நோயாளி கையில் ஆயுதம் இருந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.