``யூடியூபில் சமையல் வீடியோ, மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம் - லாரி டிரைவர் ராஜேஷ் ரவானியின் ரூட்
யூடியூப் மூலம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அப்படி, யூடியூப் மூலம் தனக்கான வருமானத்தை லட்சக்கணக்கில் அமைத்துக்கொண்டிருக்கிறார் ராஜேஷ் ரவானி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் ரவானி. சமையலில் அதிக ஆர்வம் கொண்ட ராஜேஷ், அனைவரும் யூடியூப்பில் வீடியோ போடுவதை பார்த்து தானும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் போட்ட உணவு வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது சேனலில் 1.86 மில்லியன் பேர் சப்ஸ்கிரைபர்களாகி உள்ளனர். லாரி டிரைவரான அவர், இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், லாரி டிரைவராக இருந்தபோது விபத்து ஏற்பட்டு கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து லாரி ஓட்டினேன். இதில் மாதம் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை சம்பாதித்தேன். ஆனால், யூடியூப்பில் வீடியோ போட ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு மாதமும் 4 - 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆரம்பத்தில், வீடியோவில் எனது வாய்ஸ் மட்டும் கொடுத்தேன். ஆனால், அனைவரும் என் முகத்தைக் காட்டும்படி கேட்டுக்கொண்டனர். இதனால், என் மகன் இப்போது வீடியோ எடுக்கிறான்.
நான் யூடியூப் சேனலில் சமையல் வீடியோ போட்டாலும், லாரி டிரைவர் வேலையை இன்னும் கைவிடவில்லை. இரண்டையும் சேர்த்து கவனித்துக்கொள்கிறேன். என் தந்தையும் லாரி டிரைவர்தான். அவர் அனுப்பும் 500 ரூபாயில்தான் 5 பேர் சாப்பிடவேண்டிய நிலையில் இருந்தோம். இதனால், ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கவேண்டிய நிலை இருந்தது. இப்போது எனக்கு எனது குடும்பம் துணையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
ராஜேஷ் லாரி ஓட்டிக்கொண்டு பீகார் சென்றபோது பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை வீடியோ எடுத்து தனது யூடியூபில் வெளியிட, அதுவும் பல வியூவ்ஸ்களை பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


