வீணாகும் பூக்களில் தேநீர் பொடி வகைகள்... மதிப்புக்கூட்டலில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி!
பண்டிகை காலங்களில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பண்டிகை இல்லாத காலங்களில் மார்க்கெட்டில் மிகவும் குறைந்த விலைக்கு பூக்கள் விற்பனையாகும். இதனால் சரியாக விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் அப்படியே செடியில் விட்டுவிடுவார்கள். இப்படி செடியில் விடுவதால் அடுத்த கட்டமாக பூக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதி சில விவசாயிகள் பூக்களை செடிகளிலிருந்து பறிப்பது வழக்கம். அவ்வாறு பறிக்கப்படும் பூக்களை உலரவைத்து அதைக் காசாக்கி வருகிறார் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயி சிவ்ராஜ் நிஷாத். உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் நகர், ஷேக்பூரை சேர்ந்த சிவ்ராஜ் நிஷாத் (30), சில ஆண்டுகளாக மருத்துவ துறையில் ஊர் ஊராக அலைந்து மார்க்கெட்டிங் வேலை செய்துகொண்டிருந்தார்.
அந்த வேலை ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விட்டது. உடனே தனது தோட்டத்தில் பூக்கள் சாகுபடியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால் சில நேரங்களில் பூக்களுக்கு சரியாக விலை கிடைக்காமல் விவசாயிகள் கங்கை ஆற்றில் பூக்களை கொட்டுவதை பார்த்திருக்கிறார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நிஷாத் முடிவு செய்தார். பூக்கள் குறுகிய காலம் மட்டுமே புதிதாக இருக்கும். அப்படிப்பட்ட பூக்களை என்ன செய்வது என்று தீவிரமாக ஆலோசித்ததில் உலர வைத்து விற்பனை செய்யலாம் என்ற ஒரு யோசனை நிஷாத்திடம் உருவானது.
இது குறித்து நிஷாத் கூறுகையில்,எங்கள் பகுதியிலிருந்து பூக்களை அதிக தூரத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ஆற்றில் போட்டனர். ஏற்கெனவே மருத்துவ தாவரங்கள் தொடர்பாக எனக்குக் கொஞ்சம் தெரியும் என்பதால் பூக்களின் ஆயுளை நீட்டித்து விற்பனை செய்ய திட்டமிட்டேன். உலர்ந்த பூக்களுக்கு ஆயுர்வேதம் மற்றும் மூலகை மருத்துவத்தில் அதிக தேவை இருந்ததை தெரிந்து கொண்டேன்.
ஊதா கலர் பட்டாணி பூக்கள் மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படும் என்பதை தெரிந்து கொண்டு அதன் நிறம், மருத்துவ குணம் மற்றும் வாசனை மாறாமல் உலர வைத்து விற்பனை செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூலிகை தேநீர், நீரிழிவு, வயதாவதை தடுத்தல் உட்பட பல வழிகளில் பலன் தருகிறது. எனது தொழிலை விரிவாக்கம் செய்யும் விதமாக செம்பருத்தி, சாமோமில் போன்ற பூக்களையும் உலர வைத்தேன். சாமோமில் (Chamomile) பூவில் தேநீர் தயாரிக்கப்படுகிறது. திறந்த வெளியில் பூக்களை உலர வைத்த போது தூசிகள் மற்றும் பறவை எச்சம் பட்டது. இதனால் பூக்கள் சேதம் அடைந்தது. எனவே சோலார் உலர்த்தி மூலம் பூக்களை பாதுகாப்பான முறையில் உலர வைத்தேன். சோலார் உலர்த்தி மூலம் உலர்த்தியதால் தரமும் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. இப்போது ஒரு மாதத்தில் 500 முதல் 1,000 கிலோ உலர்ந்த பூக்களை விற்பனை செய்கிறேன். ஒரு மாதத்தில் 1 லட்சத்தில் இருந்து 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. 10 பேர் நிரந்தரமாக வேலை செய்கின்றனர்.

இதன் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் பயனடைகின்றனர். தற்போது என்னிடம் 500 விவசாயிகள் எந்த வகையான பூவாக இருந்தாலும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதோடு விவசாயிகளுக்கு பூக்களை எப்படி உலர வைக்கவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறேன். ப்ளூ வேதா என்ற பெயரில் எனது பிராண்ட்டை பதிவு செய்துள்ளேன். விவசாயிகளிடமிருந்து பொருள்கள் நேரடியாக நுகர்வோருக்கு செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். நீல பட்டாணி பூக்களுடன் இஞ்சி, இலவங்கப்பட்டையை சிறியதாக வெட்டிப்போட்டு அவற்றின் வாசனையை மேம்படுத்துகிறோம். செம்பருத்தி, ரோஜா பூக்களையும் தேநீர் பொடியாக மாற்றி விற்பனை செய்து வருகிறேன். மருத்துவம் மற்றும் மூலிகை செடிகளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் அதற்காக தனி கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


