Starliner: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பும் Starliner; களமிறங்கும் மஸ்க்கின் SpaceX!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரரும், முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டனுமான புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்டார்லைனர் விண்கலனில் கடந்த ஜூன் மாதம் ஒருவாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்து விண்கலனின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளைச் செய்து, ஒரு வாரம் கழித்து மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா (NASA) தெரிவித்திருந்தது. இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் விண்வெளிக்குச் சென்று, மொத்தம் 322 நாள்கள் தங்கியிருந்தார்
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரைச் சுமந்துகொண்டு, விண்வெளி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியபோது, நாசாவும், போயிங் நிறுவனமும் ஸ்டார்லைனரில் ஹீலியம் கசிவுகள் மற்றும் விண்கலத்தின் எதிர்வினை கட்டுப்பாட்டு உந்துதல்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தன. போயிங் விண்கலத்தின் உந்துதல் செயலிழப்பால் ஆய்வுகள் முடிந்தும், அவர்கள் பூமிக்குத் திரும்புவது வாரத்திலிருந்து மாதக்கணக்கில் தாமதமானது. இந்த நிலையில், ``இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்குத் திரும்புவார்கள். ஸ்டார்லைனர் காலியாக பூமிக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது" என நாசா சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டார்லைனர் விண்கலனிற்குப் பின்னால், 10 வருட உழைப்பு உள்ளது. இந்த விண்கலனை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நாசா நிர்வாகி பில் நெல்சன், ``இரண்டு விண்வெளி வீரர்களையும் விண்வெளி நிலையத்தில் வைத்து, ஸ்டார்லைனரை பணியமர்த்தாமல் திருப்பி அனுப்பும் முடிவு என்பது பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டின் விளைவு... எங்கள் முக்கிய மதிப்பு பாதுகாப்பு" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் “spaceX” களத்தில் இறங்கியிருக்கிறது. ஸ்டார்லைனர் செப்டம்பர் தொடக்கத்தில் குழு இல்லாமல் ISS -லிருந்து அகற்றப்பட்ட பின்னர், புதிய திட்டத்தின் கீழ் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் SpaceX நிறுவனத்தின் க்ரூ ‘டிராகன்(dragon)’ விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


