சென்னை: திருமணம் மீறிய உறவு; இளம்பெண் கொலை - தற்கொலைக்கு முயன்ற ஆண் நண்பர் கைது
சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்தத் தொழிற்சாலை நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் அதன் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்தக் கட்டடத்துக்குள் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் பார்த்தபோது நிர்வாண நிலையில் பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்த பெண் குறித்தும் அவர் எப்படி இறந்தார் என்றும் போலீஸார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் சந்தியா(35)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. பின்னர் சந்தியா எப்படி இறந்தார் என விசாரித்தபோது அவர் சென்னையில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. சந்தியாவுக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் சந்தியாவுக்கு அதே ஜவுளி கடையில் வேலை செய்து வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் ராஜாவும் சந்தியாவும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்கள்.
இவர்களின் நட்பு விவகாரம் அந்த ஜவுளிகடையில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. அதனால் இருவரும் வேலையை விட்டனர். பின்னர் சந்தியா, அம்பத்தூர் பகுதியில் உள்ள பல்மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தார். ராஜா, ஆக்டிங் டிரைவராக வேலை செய்தார். இந்தச் சமயத்தில்தான் சந்தியா, தன்னுடைய கணவர் செல்வராஜ், குழந்தையுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். அதனால் ராஜா வாக்குவாதம் செய்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் சமரசமாகி தங்களின் அன்றாட பணிகளைச் செய்து வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று சந்தியாவும் ராஜாவும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள அந்த பாழடைந்த தொழிற்சாலை கட்டடத்துக்குள் இருவரும் சென்றனர்.

அங்கு இருவரும் மது அருந்திவிட்டு சந்தோஷமாக இருந்தனர். அப்போது சந்தியாவிடம் உன்னுடைய கணவர் செல்வராஜ், குழந்தையுடன் இனிமேல் நீ பேசக்கூடாது என ராஜா கூறியிருக்கிறார். அது இருவருக்குமிடையே வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, தன்னிடமிருந்த சிறிய கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்தம் அதிகளவில் வெளியேறி சந்தியா சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார். அதன்பிறகு சரண்யா அணிந்திருந்த ஆடைகளை வைத்து அவரின் சடலத்தை சுற்றிய ராஜா, பாழடைந்த கட்டடத்துக்குள் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். சரண்யாவை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் ராஜா, விஷம் வாங்கி குடித்தார். பின்னர் அவர் தன்னுடைய கால்போன போக்கில் நடந்துச் சென்று கொண்டிருந்தபோதுதான் போலீஸாரிடம் சிக்கினார்.
விசாரணையின்போது ராஜா, விஷம் குடித்த தகவலைத் தெரிவித்ததும் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். சந்தியாவை கொலை செய்த குற்றத்துக்காக ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்ததோடு அவரைக் கைது செய்திருக்கிறார்கள். சிகிச்சைக்குப்பிறகு ராஜாவை சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


