Drishyam: சொத்தை அபகரிக்க திரைப்பட பாணியில் தொழிலதிபரை கொலை செய்த கான்ஸ்டபிள் - நடந்தது என்ன?!
திரைப்படங்கள் மற்றும் வெப்-சீரியஸ்களை பார்த்துவிட்டு அதில் வருவதுபோன்று கொலை, கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளன. மலையாளத்தில் வெளியான திரிஷியம் தமிழில் பாபநாசம் என ரீமேக்கானது. இந்தியிலும் திரிஷம் படம் ரீமேக் செய்யப்பட்டது. அதனை பார்த்துவிட்டு படுகொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. டெல்லி அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்த அங்குஷ் சர்மா என்ற தொழிலதிபர் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சர்மாவை தேடி வந்தனர். போலீஸார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சர்மா முன்னாள் கான்ஸ்டபிள் பிரவீன் என்பவருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரவீனை பிடித்துச்சென்று விசாரித்த போது அவர்தான் சர்மாவை படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போது போலீஸ் அதிகாரி மியா கான் கூறுகையில், சர்மாவுக்கு நொய்டாவில் வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டை விற்பனை செய்ய திட்டமிட்டார். அவரிடம் அந்த வீட்டை ரூ.1.20 கோடிக்கு வாங்கிக்கொள்ள பிரவீன் சம்மதம் தெரிவித்தார். இதற்காக 8 லட்சம் கொடுத்தார். வீடு வாங்க இருதரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். நொய்டாவில் உள்ள வீட்டிற்கு சர்மா அதிக நாள்களாக செல்லவில்லை. இதனால் அங்கு வீட்டின் விலை என்னவென்று தெரியாமல் இருந்தது. பிரவினுக்கு வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்த பிறகு சர்மா அங்கு அந்த வீட்டை பார்க்க சென்றார். அப்போது அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு வீடு விற்பனையாவது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.1.20 கோடிக்கு வீடு கொடுக்க முடியாது என்று பிரவினிடம் சர்மா தெரிவித்தார். திரிஷயம் படத்தை பார்த்திருந்த பிரவின் அதில் வருவது போன்று சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 9-ம் தேதி சர்மாவிடம் பணம் கொடுப்பதாக கூறி வரவழைத்தார். இருவரும் விற்பனைக்கு முடிவு செய்த வீட்டிற்கு சென்றனர். அங்கு கார் பார்க்கிங் பகுதியில் அமர்ந்து மது அருந்தினர். மது அருந்திக்கொண்டிருந்த போது சர்மாவின் தலையில் பிரவின் சுத்தியலால் அடித்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து சர்மாவை கொலை செய்து உடலை அதே வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டார். பிரவினிடம் விசாரணை நடத்தி சர்மாவின் உடல் மீட்கப்பட்டது என்றார். பிரவின் டெல்லியில் கான்ஸ்டபிளாக இருந்தவர் ஆவார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் திரிஷியம் படத்தை பார்த்துவிட்டு சட்டீஷ்கரில் லுகேஷ் சாஹு(29) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் தனது மனைவியை கள்ளக்காதலியோடு சேர்ந்து படுகொலை செய்தார். உடலை இருவரும் சேர்ந்து புதைத்துவிட்டனர். தற்போது திரிஷம் படத்தை பார்த்துவிட்டு மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. லக்னோவிலும் கடந்த நவம்பர் மாதம் திரிஷியம் படத்தை பார்த்துவிட்டு 30 வயது பெண்ணை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். கொலை நடந்த 9 நாட்கள் கைது அப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இக்கொலையை கண்டுபிடிக்க போலீஸார் 1900 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் பிறகே இவ்வழக்கில் துப்பு துலங்கியது. சந்தோஷ் குமார் என்பவர் தனது மனைவியின் சகோதரியை கொலை செய்தார். இதன் மூலம் மனைவி வீட்டில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் தனது மனைவிக்கு கிடைக்கும் என்று சந்தோஷ் குமார் கருதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது டெல்லி காவலரும் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


