`500 கோடி குடுங்க!’ - தற்கொலைக்கு முயன்ற டீலர்கள்! ஹீரோ கம்பெனிக்கும் டீலர்களுக்கும் என்ன பிரச்னை?
விவசாயிகள் போராட்டம்; டிரைவர்கள் போராட்டம்; மருத்துவர்கள் போராட்டம்; ஆசிரியர்கள் போராட்டம் தெரியும் - முதல் முறையாக டீலர்கள் போராட்டம் ஒன்று நடந்திருக்கிறது. ஆட்டோமோபைல் துறையில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே இது புதுசு!
‛ஹீரோ எலெக்ட்ரிக்’ என்றொரு நிறுவனம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ப்ளெண்டர், பேஸன் ப்ரோ, விடா போன்ற டூ-வீலர்கள் தயாரிக்கும் ஹீரோ நிறுவனம் இல்லை இது. எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் தயாரிக்கும் நிறுவனம்தான் ஹீரோ எலெக்ட்ரிக். சிலர் ஹீரோ எலெக்ட்ரிக்கையும், ஹீரோ மோட்டோ கார்ப்பையும் குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி.
ஹீரோ எலெக்ட்ரிக்
விஜய் முன்ஜால், அவரது மகன் நவீன் முன்ஜால் ஆகியவர்களால் தலைமை வகிக்கப்பட்டு வரும் ‘ஹீரோ எக்கோ டெக் குரூப்’ (Hero Echo Tech Group) நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் HEVPL (Hero Electric Vehicle Private Ltd). இந்த ஹீரோ எலெக்ட்ரிக், பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. சுமார் 75,000 ரூபாய் இருந்தால், உங்களால் ஒரு ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிவிட முடியும். எடி, ஃபோட்டான், ஆப்டிமா, ஆட்ரியா, NYX என்று பல பட்ஜெட் ஸ்கூட்டர்களை விற்று வருகிறது ஹீரோ எலெக்ட்ரிக். அதனாலேயே எலெக்ட்ரிக்கில், ஒரு மாஸ் மார்க்கெட் இடம் ஹீரோ எலெக்ட்ரிக்குக்கு உண்டு.
ஹீரோ மோட்டோ கார்ப்
இந்த HMC (Hero Moto Corp)-ன் தலைவர் பவன் முன்ஜால். இவர் விஜய் முன்ஜாலின் மாமா. விஜய் முன்ஜால், பவன் முன்ஜாலின் மருமகன். ஒரே குடும்பப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், இருவரும் வெவ்வேறு மார்க்கெட்டில் கலக்கி வருகிறார்கள். நீண்ட நாள்களாக எலெக்ட்ரிக்கில் காலடி எடுத்து வைக்காத ஹீரோ மோட்டோ கார்ப் பவன் முன்ஜால், விடா ஸ்கூட்டர் மூலம் வந்துவிட்டார். ஹீரோ எலெக்ட்ரிக்கை விடப் பன்மடங்கு வசதிகளுடன், விலையுடன். அதாவது இப்போது ஒரே குடும்பப் பெயர் கொண்ட ஜாம்பவான் நிறுவனங்கள், எலியும் பூனையுமாகச் சண்டைப் போடுகின்றன.

2010–ம் ஆண்டு. இரண்டு முன்ஜால்களுக்கும் ஒரு சின்ன வாய்க்கால் தகராறால் பிரிவினை. அந்தச் சண்டைதான் இன்னும் தொடர்கிறது.
ஓகே! இப்போது விஷயத்துக்கு வருகிறேன். 200 டீலர்கள், குருகிராமில் உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 150 கோடி ரூபாயை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள் இந்த அத்தனை டீலர்களும். இந்தத் தொகை போன ஆண்டுக்கான டூவீலர்களின் சப்ளை மற்றும் உதிரிபாகங்களின் வாரன்ட்டி போன்ற விஷயங்களுக்காக அட்வான்ஸாகப் பெறப்பட்ட தொகை. ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த வாகனங்களின் டெலிவரியும் நடக்கவில்லை; உதிரிபாகங்களின் சப்ளையும் நடக்கவில்லை என்பதுதான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். இந்தக் காலதாமதத்தால், சுமார் 50,000 வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் டீலர்கள். இதில் சில டீலர் உரிமையாளர்கள் தற்கொலைக்கும் முயற்சி செய்துவிட்டார்களாம்.
முக்கியமாக, பேட்டரிகள் சார்ஜர்கள் என்று எதுவுமே டீலர்களுக்கு சப்ளை செய்யப்படவில்லை என்பதால், ‛வாரன்ட்டி இருக்கே; மாத்திக் கொடுங்க’ என்று தங்களை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்குக் கையை விரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சில வாடிக்கையாளர்கள், டீலர்ஷிப்களைத் தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் சில டீலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்கிறார்கள்.
அதேபோல் அரசாங்கத்தால் தரப்படும் FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) மானியமும் ரீ-இம்பர்ஸ் செய்யப்படவில்லையாம். டெல்லியில் உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் டீலர்ஷிப் உரிமையாளரும், World Federation of ZE EV எனும் அமைப்பின் தலைவருமான நிஷாத் பன்ஸால் என்பவர், "இதனால் நாங்கள் பெரும் கடன்சுமைக்கு ஆளாகிவிட்டோம். எங்களுக்கு உரிய நஷ்டஈட்டுத் தொகையும் ரீ-இம்பர்ஸ்மென்ட்டும் கிடைக்க வேண்டும்! கூடவே பாகங்களின் சப்ளையும், வாகனங்களின் டெலிவரியும் விரைவில் நடக்க வேண்டும்! ஆனால் நஷ்டஈட்டுக்கு பதில் கோர்ட் லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது ஹீரோ! இது நியாயம் இல்லை!’’ என்கிறார்.
பிரதமருக்கும் இது தொடர்பாக கடிதம் போயிருக்கிறதாம். நிலுவை மானியத் தொகையான 500 ரூபாய் கோடி ரூபாயை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தர வேண்டும் என்றும் சொல்கிறது அந்தக் கடிதம்.
ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக்கில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். 500 கோடி ரூபாய் மானியத் தொகை தாங்கள் தர வேண்டும் என்பது தவறான தகவல் என்றும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது ஹீரோ எலெக்ட்ரிக்.
"டீலர்கள், எங்கள் நிறுவனத்துடன் விற்பனை எஸ்டிமேஷனைப் பொருத்து பலவிதமான ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்கள். தொழிற்சாலையில் கடந்த 9 மாதங்களாகத் தயாரிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் இந்தத் தாமதம். இப்போது டீலர்களுக்கு ஏற்கெனவே டிஸ்பாட்ச்சைத் தொடங்கிவிட்டோம்!" என்கிறார் ஹீரோ எலெக்ட்ரிக்கின் அதிகாரி ஒருவர்.
சீக்கிரம் சண்டையைச் சமாதானம் ஆக்கி, வாடிக்கையாளர்களுக்கு வண்டியை டெலிவரி பண்ணுங்க ஹீரோ!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


