கொடைக்கானல்:யானைத் தந்தம் விற்க முயன்ற பேரூராட்சி திமுக கவுன்சிலர் உட்பட மூவர் கைது - நடந்தது என்ன?
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் வனப்பகுதிகளில் யானை, காட்டுமாடு, மான் உள்பட ஏராளமான வனவிலங்கள் உள்ளன. இந்நிலையில் மதுரை வனஉயிரின குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைத் தந்தங்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கொடைக்கானலில் விசாரணை நடத்தி வந்தனர்.
கொடைக்கானல் மன்னவனூருக்கு யானை தந்தத்தை விற்பனைக்கு கொண்டுவந்த கீழானவயல் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரை பிடித்தனர். விசாரணையில் அவரிடம் வத்தலகுண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர்(திமுக) பொன்வண்ணன், அதேபகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் புரோக்கர்களாக இருந்து தந்தத்தை வாங்கி விற்க இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவரையும் கைது செய்து மன்னவனூர் வனச்சரக அதிகாரிகளிடம் வனஉயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``யானை தந்தத்தை விற்க வாட்ஸ்-அப் மூலமாக கேரளாவை சேர்ந்தவர்களுக்கு யானைத் தந்தங்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை கீழானவயலில் உள்ள சந்திரசேகரின் வீட்டிலிருந்து யானை தந்தத்தை ஜீப்பில் வைத்து சந்திரசேகர், முருகேசன் மற்றும் பொன்வண்ணன் ஆகிய 3 பேர் விற்பனைக்காக மன்னவனூர் பகுதிக்கு எடுத்து வந்தபோது பிடித்தோம்.

சந்திரசேகருக்கு யானை தந்தம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்ய முயன்றிருக்கிறார்? எவ்வளவு ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டிருக்கிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


