மீண்டும் வம்பிழுக்கும் கேரளா; `120 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது உச்சநீதிமன்றத்தில் மனு!

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமான முல்லைப்பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டது. கேரள அரசியல்வாதிகள் அணைக்கு எதிரான சர்ச்சைகளை கிளப்பியதைத் தொடர்ந்து 1979-க்கு பிறகு 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடிந்தது. நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் 2014-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அணையில் நீர்மட்டம் 136 அடிகூட உயரவிடாமல் கேரள அரசியல்வாதிகள் தடுத்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை 142 அடியிலிருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜெ நெடும்பாறா உள்பட 4 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணை சுண்ணாம்புக்கல் மற்றும் சர்க்கியால் கட்டப்பட்டது. இந்த அணை 50 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டவை. தற்போது 129 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பாதுகாப்பில்லாத இந்த அணை உடைந்தால் இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய பகுதிகளில் வாழும் 50 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டாவது முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிடவேண்டும். ஏற்கெனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது கேரள அரசு அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. இது மக்களின் உயிர் சார்ந்த விவகாரம் என்பதால், முல்லைப்பெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் நீரை தேக்கக்கூடாது என தமிழக, கேரள அரசுகளுக்கும், பிற சட்டப்பூர்வ துறைகளுக்கும் உத்தரவிட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக், "அணையில் 120 அடிக்கு மேல் நீர் தேக்கக்கூடாது என மனுதாக்கல் செய்துள்ள மேத்யூஸ் ஜெ நெடும்பாறா, மூத்த வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட கருத்திற்காக மூன்று மாத சிறை தண்டனை பெற்றவர். கூடுதலாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற ஓராண்டுகள் தடை விதிக்கப்பட்ட இவர், தற்போது முல்லைப் பெரியாறு அணைக்காக களம் இறங்கி இருக்கிறார். அவரின் மனுவில் அணை தொடர்பாக 2014-ல் உண்மையை ஆராயாமல் தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார். இதற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழக அரசு சார்பில் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.