சாத்தூர்: சாலை தடுப்பில் மோதி கார் விபத்து; பேராசிரியை பலி - இருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியை பலியானார். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 45), தனியார் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரின் தோழியும், கல்லூரியில் உடன் பணிபுரியும் மற்றொரு கணிதப்பேராசிரியையுமான திரிபுரசுந்தரியும் சுப நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி சங்கரன்கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். பேராசிரியை ஸ்ரீதேவிக்கு சொந்தமான காரில் கிளம்பிய இருவரையும், மேலப்புதூரை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் விஜயகுமார்(30) என்பவர் அழைத்துச் சென்றுள்ளார்.

மீட்பு

இந்தநிலையில், சுப நிகழ்ச்சியை முடித்துவிட்டு பேராசிரியைகள் இருவரும் காரில் மீண்டும் சாத்தூர் நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். கார் மதுரை சாத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெத்துரெட்டியபட்டி விலக்கு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில், 3 பேருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர்.

பேராசிரியை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீஸார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பேராசிரியர் ஸ்ரீதேவி உயிரிழந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த மற்றொரு பேராசிரியையான திரிபுரசுந்தரி மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் ஆகிய இருவருக்கும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" எனக்கூறினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.