ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிறையில் இருக்கும் பிரபல `தாதா’வுக்கும் தொடர்பு... நீளும் பட்டியல்!

பெரம்பூர் பகுதியில் வசித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டின் அருகே கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம் என செம்பியம் போலீஸார் விசாரித்துவந்த நிலையில் கொலை நடந்த சில மணி நேரத்திலேயே கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரின் மைத்துனர் வழக்கறிஞர் அருள், ரௌடிகள் திருவேங்கடம், திருமலை உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல்களின்படி அ.தி.மு.க-வின் முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் மலர்க்கொடி, பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி கஞ்சா அஞ்சலை, வழக்கறிஞர்கள் ஹரிஹரன் என அடுத்தடுத்து கைதுப் படலம் தொடர்ந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரௌடிகள் `சம்பவ’ செந்தில், `சீசிங்’ ராஜாவையும் போலீஸார் தேடிவந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ரௌடி திருவேங்கடம் போலீஸாரைத் தாக்கி தப்ப முயன்றபோது போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முக்கியமான குற்றவாளிகளான பொன்னைபாலு, வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன் உள்ளிட்டோரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், வடசென்னையின் பிரபல தாதா நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்தனர். அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் பிரபல தாதா நாகேந்திரனையும் இந்த வழக்கில் குற்றவாளியாக போலீஸார் சேர்த்து அவரைக் கைதுசெய்யும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நாகேந்திரனுக்கு வாரன்ட்டைக் கொடுக்க போலீஸார் வேலூருக்குச் சென்றனர். ஆனால் அவரோ வாரன்ட்டை வாங்க மறுத்ததால் சிறையிலேயே அதை ஓட்டிய போலீஸார், சிறை அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இதையடுத்து நாகேந்திரனையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்திருப்பது ரௌடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் என்ன பிரச்னை என தனிப்படை போலீஸாரிடம் பேசினோம்.``1990-களில் வடசென்னையில் கோலோச்சியவர், பிரபல தாதா நாகேந்திரன். இவர்மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. 1997-ல் நடந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 1999-ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் உயர் பாதுகாப்பு பிளாக்கில் நாகேந்திரன் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்தபடியே நாகேந்திரன், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனால் நாகேந்திரனின் எதிரிகள் அவரின் கூட்டாளிகளால் கொலைசெய்யப்பட்டனர். சிறையில் நாகேந்திரன் இருந்தாலும், அவர்மீது கொலை உள்ளிட்ட சில வழக்குகள் அடுத்தடுத்துப் பதிவாகின. இந்த வழக்குகளில் 2015-ம் ஆண்டு நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை செயலாளரும், ரௌடியுமான தென்னரசு கொலை முக்கியமானது.

நாகேந்திரன்

தாதா நாகேந்திரன் மீது வழக்குகள் பதிவானாலும் அதிலிருந்து அடுத்தடுத்து அவர் விடுதலையானார். தற்போது ஸ்டான்லி சண்முகம் கொலையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். தென்னரசு கொலை வழக்கு விசாரணை உள்ளிட்ட சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில்தான் நாகேந்திரனின் மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. அது தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலைசெய்ய ஆற்காடு சுரேஷின் டீம் உள்ளிட்ட சிலர் காத்திருந்தனர். அவர்களில் சிலர் சிறையிலிருக்கும் நாகேந்திரனின் உதவியை நாடினார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் எதிர் டீம் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். அதில் குறிப்பாக ஆற்காடு சுரேஷின் மைத்துனரான வழக்கறிஞர் அருளும் அஸ்வத்தாமனும் போனில் பேசியிருக்கின்றனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22-வது குற்றம்சாட்டப்பட்டவராக அஸ்வத்தாமனையும், 23-வது குற்றம்சாட்டப்பட்டவராக அஸ்வத்தாமனின் தந்தையும், பிரபல தாதாவுமான நாகேந்திரனையும் சேர்த்திருக்கிறோம்.

ஏற்கெனவே பிரபல ரௌடிகள் `சீசிங்’ ராஜா, `சம்பவ’ செந்தில் ஆகியோர் எங்களின் சந்தேக வளையத்தில் இருக்கிறார்கள். அது தொடர்பாக பா.ஜ.க-வின் நிர்வாகியும், வழக்கறிஞருமான பால் கனகராஜிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். அவர் அளித்த தகவலின்படி அடுத்தகட்டமாக சிலரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்திருக்கிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் குறிப்பிட்டு ஒரு காரணம் என்பதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், அவருக்கு எதிரிகள் அதிகம். அவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங்கைக் கொலைசெய்ய ஒன்றிணைந்திருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தகராறு முதல் ஸ்க்ராப் பிசினஸ் வரை ஆம்ஸ்ட்ராங்குக்கு முன்விரோதம் இருந்துவருகிறது. அவர்களைப் பட்டியலிட்டு விசாரித்துக்கொண்டிருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் `சம்பவ’ செந்திலின் கூட்டாளிகள் அளித்த தகவலின்படி ஸ்பெஷல் டீம் வடமாநிலங்களில் தங்கியிருக்கிறது. `சம்பவ’ செந்தில், எங்களிடம் சிக்காமலிருக்க டெக்னாலஜியைப் பயன்படுத்திவருகிறார். ஆனாலும் அவருக்கே தெரியாமல் சில ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. `சம்பவ’ செந்தில் சிக்கினால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதிய திருப்பம் ஏற்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.