Punjab: `இரவில் வெளியே வர தடை; ஓர் அறையில் இருவர் - வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி நாடு முழுவதும் செல்கின்றனர். தமிழகத்தில் சிறிய உணவகம் உட்பட அனைத்து துறைகளிலும் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதால், பல இடங்களில் அவர்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மறுபுறம், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சில நேரங்களில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு, தங்களது சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றுவிடுகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள கிராமத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரார் என்ற கிராமத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து, அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்திருக்கின்றனர்.
அதில், `இரவு 9 மணிக்குப் பிறகு வெளிமாநிலத் தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளிமாநிலத் தொழிலாளர்கள் கட்டாயம் போலீஸ் சரிபார்ப்பு சான்று வைத்திருக்கவேண்டும். புகைப்பிடிக்கவும், புகையிலை மற்றும் வெற்றிலை சாப்பிடவும் இக்கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் புகையிலை, வெற்றிலையை மென்றுவிட்டு சாலையோரம் துப்பி அசிங்கப்படுத்துகின்றனர். எனவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓர் அறையில் இரண்டு பேர் மட்டுமே தங்கி இருக்கவேண்டும், அரைகுறை ஆடையுடன் தெருக்களில் நடமாட தடை... என கட்டுப்பாடுகள் நீண்டுகொண்டே செல்கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் எதாவது குற்றத்தில் ஈடுபட்டால், அவர்கள் தங்கி இருக்கும் வாடகை வீட்டு உரிமையாளர்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் சாலையில் புகையிலை தின்றுவிட்டு துப்பி சேதப்படுத்துகின்றனர் என்றும், அரைகுறை ஆடையுடன் சாலையில் நடமாடுவதாகவும் அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இக்கட்டுப்பாடுகளால் சில வெளிமாநிலத் தொழிலாளர்கள் கிராமத்தை காலி செய்துவிட்டனர். இப்பிரச்னை உள்ளூர் போலீஸிற்கு சென்றுள்ளது. போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று இந்த விதிகள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் அறிவிப்புப் பலகையை மாற்றி வைக்க இருப்பதாக, உள்ளூர் கிராம கவுன்சிலர் தெரிவித்துள்ளார். இக்கிராமத்தில் மொத்தம் 2,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 500 பேர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆவர். ஏற்கெனவே குராலி என்ற கிராமத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


