Hindenburg Report: `அடிப்படை ஆதரமற்றவை... - ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டும், SEBI தலைவர் மறுப்பும்!
கடந்த ஆண்டு அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது. ஆனால், அந்தக் குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்தது அதானி குழுமம். இந்த நிலையில், சமீபத்தில், ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மாதபி பூரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஹிண்டன்பர்க் அறிக்கையில், எங்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அதில் கூறப்பட்டிருப்பதை முற்றிலுமாக மறுக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் ஒரு திறந்த புத்தகம்.
தேவையான அனைத்து தகவல்களும் ஏற்கனவே பல ஆண்டுகளாக SEBI க்கு வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் தனிப்பட்ட முறையில் இயங்கிய காலகட்டம் முதல் இப்போதுவரை அனைத்து நிதி ஆவணங்களையும், அவற்றை பரிசிலிக்கக் கோரும் அதிகாரிகளுக்கு அதை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையின் நலன் கருதி, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம். ஹிண்டன்பர்க் நிறுவனம், செபிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியைத் தேர்ந்தெடுத்திருப்பது துரதிஷ்டவசமானது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


