`முல்லைப்பெரியாறு அணைக்கெதிராக, கேரளா விஷம பிரசாரம்- குமுளியில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கங்கள்

ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் கேரள அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகப் பிரச்னைகளை கிளம்புவது வழக்கம். அந்த வகையில், இம்முறை வயநாடு நிலச்சரிவைக் காரணம் காட்டி முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாய சங்கங்கள் நாளை குமுளியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

முல்லைப்பெரியாறு அணை

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை, 152 அடி உயரம் கொண்டது. தென் தமிழக மக்களுக்கு முல்லைப்பெரியாறுதான் நீராதாரமாக உள்ளது. இந்த நிலையில், கேரள அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகப் பொய் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் கடந்த 1979 முதல் அணையில் 136 அடி நீர் மட்டுமே தேக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை பலப்படுத்தப்பட்டது. மேலும் நீண்ட் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2006 மற்றும் 2014-ல் உச்ச நீதிமன்றம், அணையில் 142 அடி நீர் தேக்கவும், பேபி அணைய பலப்படுத்திய பிறகு 152 அடி நீர் தேக்கவும் உத்தரவிட்டது. இதன் பிறகும்கூட பல நிபுணர் குழுக்கள், அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாகத் தெரிவித்தன.

உச்சநீதிமன்ற உத்தரவு

இருந்தபோதிலும் அணையில் 140 அடி நீர்கூட தேக்கவிடாமல் கேரள அரசியல்வாதிகள் தடுத்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாகப் பிரச்னையைக் கிளப்பும் கேரள அரசியல்வாதிகள், இம்முறை வயநாடு நிலச்சரிவைக் காரணம் காட்டி அணையை இடிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதைக் கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், குமுளி எல்லையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக், ``கேரளா, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு தமிழகத்தைச் சார்ந்தே இருக்கிறது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 10 பிரதான சாலைகளை ஒரு வாரம் இழுத்துப் பூட்டி பொருளாதாரரீதியான தாக்குதலை ஏற்படுத்தினால், கேரளா தாங்காது.

ச.பென்னிகுயிக்

முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், 95 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்கிற பொய்ப் பிரசாரம் கேரளாவில் நடக்கிறது. முகநூல், யூடியூப் உட்பட சமூக வலைதளங்களில் அணைக்கு எதிரான பிரசாரம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதற்கு தமிழக அரசு கண்டனத்தை தெரிவிக்கவில்லை. திமுக அரசு மயிலிறகைக் கொண்டு பினராயி விஜயனை வருடி விடுகிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்துப் போராட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.