Anna Centenary Library: சினிமா ஆர்வலர்களுக்காக அண்ணா நூலகத்தில் சினிமா திரையிடும் முன்னெடுப்பு!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான நூலகமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நூலகத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விசாலமான இடவசதிகளோடு பிரமாண்டமாக அமைந்துள்ள நூலகத்தில் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் இருந்தாலும் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாகவும் வருகிறார்கள். நூலகத்திற்குள்ளேயே வெவ்வேறு துறைகள் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

நூலகத்தில் சினிமா ஆர்வலர்களுக்காக சினிமாத்துறை சார்ந்த புத்தகங்கள் இருந்தாலும் தொழில்நுட்பம் சார்ந்த நேரடி அறிவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. அதற்காக இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சினிமா சார்ந்த ஆர்வலர்களுக்காகப் பல்வேறு விதமான திரைப்படங்களைத் திரையிட்டு அது சார்ந்த உரையாடலை நிகழ்த்தும் சிறந்ததொரு முன்னெடுப்பை தொடங்கவிருக்கிறார்கள். இதுகுறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் காமாட்சி பகிர்ந்து கொண்ட போது, "2010-ல அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆரம்பிச்சதுல இருந்தே யாரும் புத்தகத்தை எடுத்துட்டுச் செல்ல முடியாது. இங்க இருந்துதான் படிக்கணும். ஆனா கடந்த மார்ச் மாதத்துல இருந்து புத்தகத்தை எடுத்துட்டு போய் படிக்கலாம்கிற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே தொடர்ந்து அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திட்டு வர்றோம்.

வாரத்துல ஞாயிற்றுக்கிழமை தோறும் குழந்தைகளுக்கு அவர்களின் திறனை வளர்க்கிற விதமா கணினிப் பயிற்சி, குழந்தைகளுக்கான திரைப்படம் போடுறது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திட்டு வர்றோம். அதைப்போல ஒவ்வொரு துறை சார்ந்தும் வெவ்வேறான நிகழ்வுகள் அந்தத் துறைகளின் ஆளுமைகளைக் கொண்டு நடத்திட்டு வர்றோம். பொதுவாகவே எல்லோராலும் பார்க்கக்கூடிய விரும்பக்கூடிய வெகுசன ஊடகமாக திரைப்படம்தான் இருக்கிறது. திரைப்படம்ங்கிறது ஒரு பண்பாடு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. திரைப்படங்களை வெறுமனே பாத்துட்டு மட்டுமே போயிடுறோம். அந்தத் திரைப்படங்கள் சார்ந்த விமர்சனங்களும் உரையாடல்களும் தேவையானவை.

நூலகர் காமாட்சி

திரைப்படங்களைப் பெரிய திரையில திரையீட்டு உரையாடலாம்னு இது சார்ந்து இயங்குறவங்க கிட்ட கேட்டு இது பண்ணலாம்னு இந்த முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கோம். நூலகத்தோட கலையரங்கத்துல திரையரங்கம் ஒண்ணு இருக்குது. அங்க ஒரே நேரத்துல 1100 பேர் வரைக்கும் அமர்ந்து பார்க்கிற அளவுக்கு ஏசி வசதியோட அமைந்திருக்கு. என்னென்ன திரைப்படங்களை எல்லாம் திரையிடலாம்னு யோசிக்கும் போது சுயாதீன திரைப்படங்கள், உலகத் திரைப்படங்கள் போன்ற பல்வேறு விதமான திரைப்படங்களைத் திரையிட்டு உரையாடலை நிகழ்த்துறோம். மாதத்துல இரண்டு முறை இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும் திரையிட முடிவு பண்ணிருக்கோம்.

இதோட முதல் நிகழ்வா சார்ளி சாப்ளினோட மார்டன் டைம்ஸ் படத்தை வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்குத் திரையிடப்போறோம். வெறுமனே ஒரு படத்தைப் பார்க்கிறதுக்கும் பாத்துட்டு அது பத்துன கலந்துரையாடல் நிகழ்த்தும் போதும் அது தொடர்பான கண்ணோட்டமே மாறும். அது நல்ல சமூகத்துக்கான அடையாளமாக இருக்கும்னு நினைக்கிறோம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

சினிமா சார்ந்த ஆர்வலர்களுக்கு இந்தத் திரையிடல் காட்சி பார்த்த அறிவையும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவையும் மேம்படுத்தும் என்கிற நோக்குலதான் இதை நாங்க தொடங்கிருக்கோம். மாதத்துல இரண்டு நாள் பிலீம் பெஸ்டீவல் நடக்கிற மாதிரிதான் இனி நடக்கப் போகுது. எல்லாரும் ஆதரவு கொடுத்து பயன்படுத்திக்கோங்க!" என்று அழைப்பு விடுக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.