சணல், தேயிலை, பருத்தி, மூங்கில்... வங்க தேசமும் அதன் விவசாய உற்பத்தி பொருள்களும்...
வங்கதேசத்தில் ஏற்பட்ட பெரும் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு பிரதமரான ஷேக் ஹசீனா, அவர் சகோதரியுடன் தன்னுடைய நாட்டிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து முகமது யூனுஸ் இடைக்கால பிரதமாக பதவியேற்றுள்ளார். 1972-ல் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்க தேசமாக உருவெடுத்தது. இந்தியாவை போன்றே வறுமை, பொருளாதாரம் என பின்தங்கிதான் இருந்தது. ஆனால், 1980-க்கு பிறகு அதன் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து இன்று வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து வருகிறது.
வங்க தேசத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. அரிசி முக்கிய உணவுப் பயிராக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து உலக அளவில் சணல் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கோதுமை, தேயிலை, பருத்தி, மா உள்ளிட்ட பயிர்கள் பெருவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கடுத்து முக்கிய பொருளாதாரமாக இருந்து வருவது ஆடை ஏற்றுமதி.
வங்கதேசத்தின் விவசாயம்
வங்கதேசத்தில் ஜமுனா, பத்மா, பிரம்மபுத்திரா ஆகிய முக்கியமான ஆறுகள் பாய்கின்றன. சில பகுதிகள் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயம் மேற்கொள்ளப்படும் வானம் பார்த்த பூமியாகவும் இருந்து வருகிறது. அந்நாட்டை பொறுத்தவரை மிதமான மழை, மிதமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றால் வழக்கமான காலநிலையே உள்ளது.
முக்கியமான நதிகள் கடலில் கலக்கும் பகுதியாக இருப்பதால், இது டெல்டா பகுதியாகவும் விளங்கி வருகிறது. சணல், தேயிலை, பருத்தி போன்ற பணப்பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்பட்டாலும் நெல் சாகுபடி முதன்மையானதாக உள்ளது. சணல் மற்றும் தேயிலை இரண்டும் அந்த நாட்டின் அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரங்களாக இருந்து வருகின்றன.

வங்கதேசம் 4 பெரும் விவசாய மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மண்டலமான சில்ஹெட் மற்றும் சிட்டகாங் பகுதிகளில் மூங்கில் மற்றும் பிரம்பு (பனை வகை) மரங்களால் சூழப்பட்ட காடுகளால் உருவான சிறு சிறு மலைகளைக் கொண்டுள்ளது. இங்கு வளரும் பெரிய வகை மூங்கில் நாட்டின் காகித உற்பத்திக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. மத்திய மண்டலம் என்பது வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் வடக்கே உள்ள அந்நாட்டின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த பகுதியில் பல ஏரிகள் மற்றும் சதுப்பு நில பகுதிகள் இருப்பதால் இந்த மண்டலத்தின் பகுதியின் மண் மதுபூர் காடுகளை (மருத்துவ குணமுள்ள தாவரங்கள்) உருவாக்குகிறது. ஜமுனா நதியின் வடமேற்கிலும், பத்மாவின் தென்மேற்கிலும் அமைந்துள்ள பகுதி ஒரு தட்டையான சமவெளி பகுதியை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் தானியங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளன.
வங்காள விரிகுடா கடலை ஒட்டிய தெற்கு மண்டலம் சுந்தரவனக் காடுகளின் பரந்த ஈரநிலங்களைக் கொண்டுள்ளது. இங்கு தனித்துவமான சதுப்புநிலத் தாவரங்கள் உள்ளன. இங்கு காணப்படும் சுந்தரி (ஹெரிடியேரா ஃபோம்ஸ் அல்லது எச். மைனர் ) உட்பட பல சதுப்புநில இனங்கள் வணிக ரீதியாக மதிப்புமிக்கவை. இதைத்தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் மற்ற முக்கிய விவசாயப் பொருள்களான கோதுமை, பயறு வகைகள், பட்டாணி, பீன்ஸ் மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு பல்வேறு வகையான எண்ணெய் வித்துக்கள் மற்றும் நறுமண மசாலா பொருள்கள் கரும்பு, புகையிலை, போன்றவையும் வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசி போன்ற பழங்களும் நிறைந்த விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
கனிம வளங்கள் குறைந்த அந்த நாட்டில் டெல்டா பகுதிகள் அதிகமாக இருப்பது கூடுதல் சிறப்பு. இதனால் மீன் பிடி தொழில் அங்கு சிறந்து விளங்குகிறது. மேலும் பண்ணை மீன் வளர்ப்பு நாட்டின் மீன் விளைச்சலில் ஐந்தில் இரண்டு பங்குக்கு ஆதாரமாக உள்ளது.

ஆரம்பத்தில் பாகிஸ்தானிய அரசின் கீழ் வங்கதேசம் செயல்பட்டு வந்த காலத்தில் புதிய தன்னாட்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்திருந்த நிலையில் சுதந்திர வங்கதேசத்தில் சோசியலிஸ்ட் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து விவசாயத்தை நம்பியிருந்த வங்கதேச பொருளாதாரம் தொழில்மயக்கமாக்கல் கொள்கைக்கு வித்திட ஆரம்பித்தது. ஏற்றுமதி அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், உணவு பொருள்கள், கடல் உணவுகள் என வேளாண்மை சார்ந்த பொருள்கள்தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வங்கதேசத்தில் 40 சதவிகித மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். நகரமயமாக்கல் இருந்தாலும் இன்னும் 85 சதவிகித மக்கள் கிராமங்களில்தான் வாழ்கின்றனர்.
வறுமை நாடுகளின் பட்டியலில் இருந்த வங்கதேசம் தன்னுடைய சீரிய முயற்சியினால் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நாட்டின் விவசாய பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.
அதேசமயம் வங்க தேசத்தின் ஒத்த காலநிலையையைக் கொண்ட இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சணல், தேயிலை, மூங்கில் உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. அதேபோல மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பருத்தி அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இந்தப் பொருள்களின் ஏற்றுமதியில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


