Vinod Kambli: நான் நலமாகத்தான் இருக்கிறேன்!- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி
வினோத் காம்ப்ளி - இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான பெயர்.
கழுத்தில் தங்க செயின், பிரேஸ்லெட், காதில் கம்மல் என அவரின் ஸ்டைலும், ஆட்ட அணுகுமுறையும் கரீபிய வீரர்கள் போன்று இருக்கும். 1988-ம் ஆண்டு மும்பையின் ஸ்கூல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரோடு இணைந்து 664 ரன்கள் அடித்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் மூலம் உலகுக்கு அறிமுகமான பெயர்தான் வினோத் காம்ப்ளி. சச்சினுக்கு மிக நெருங்கிய நண்பரும் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்ற வினோத் காம்ப்ளி அண்மையில் தமக்கு யாரும் உதவி செய்யவில்லை. தாம் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும் தனக்கு வேலை வேண்டும் என்றும் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். இதனை அடுத்து பலரும் வினோத் காம்ப்ளிக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வினோத் காம்ப்ளி தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் தள்ளாடிய நிலையில் அவரை ரசிகர்கள் இரு கைகள் தாங்கி அழைத்துச் சென்றனர். அப்போது வினோத் காம்ப்ளியின் கால்கள் மற்றும் கைகள் சரியாக இயங்கவில்லை.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக ஜொலித்த வினோத் காம்ப்ளி தற்போது மோசமான நிலையில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் பதிவுகளைப் பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கர் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் வினோத் காம்ப்ளி தான் நலமாகவுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

அவரை காண அவரது நண்பர்கள் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களிடம், "நான் நலமாகத்தான் இருக்கிறேன். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
வினோத் காம்ப்ளி உடல்நலம் குறித்துப் பேசிய அவரது நண்பர், "நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் ஜாலியான மனநிலையில்தான் இருந்தார். உடல்நல பாதிப்பு ஏதும் இல்லை. அவர் நலமாகத்தான் இருக்கிறார். அவரது மகன் கிறிஸ்டியானோ, அவரது தந்தையைப் போலவே இடது கை பேட்டராக வருவார். தனது தந்தையிடம் இருந்து பேட்டிங் டிப்ஸ்களைக் கற்றுக்கொண்டு வருகிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


