Vinesh Phogat: சச்சின் ஆதரவு, நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - வினேஷுக்கு வெள்ளி கிடைக்குமா?
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (29) இறுதிப் போட்டிக்குச் செல்வதற்குமுன் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் பேசுபொருளாகியிருந்தது.
நடைபெற்றுவரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ், இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இறுதிப்போட்டியில் அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இறுதிப் போட்டி நடைபெறுவதற்குமுன் நடக்கும் உடல் எடை சோதனையில் வினேஷ் போகத், நிர்ணயித்த எடையைவிட 100 கிராம் எடை அதிகம் இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த எதிர்பாராதத் தகுதி நீக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, மனமுடைந்த வினேஷ் போகத், தனது ஓய்வை அறிவித்தார். இது நாடெங்கும் பெரும் விவாதத்தைக் கிளப்ப, வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று நாடெங்கும் கோரிக்கைகள் வலுத்தன.
Court of Arbitration for Sports says, the decision on Vinesh Phogats plea against her disqualification is expected to be issued before the end of the Olympic Games pic.twitter.com/DuBIIB9Kax
— ANI (@ANI) August 9, 2024
இதையடுத்து இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS - The Court of Arbitration for Sport) வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். டாடா சன்ஸ் vs சைரஸ் மிஸ்திரி வழக்கு, குல்பூஷன் ஜாதவ் வழக்கு, அயோத்தி ராமர் கோவில் - பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ராமர் கோவிலுக்கு ஆதரவாக என இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளைக் கையாண்ட வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே, வினேஷ் போகத்திற்காக ஆஜரானார். நேற்று பாரிஸில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
அந்த விசாரணை தொடர்பாக வெளியாகியுள்ள CAS-ன் கடிதத்தில், "விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் தற்காலிக பிரிவின் நடைமுறை விரைவாக நடந்து வருகிறது. எனினும், ஒரு மணி நேரத்துக்குள் தகுதி நீக்கம் பற்றிய முடிவை அறிவிப்பது சாத்தியமில்லை. அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் விசாரணை நடத்துவார். பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.
#VineshPhogat #Paris2024 #Olympics @WeAreTeamIndia pic.twitter.com/LKL4mFlLQq
— Sachin Tendulkar (@sachin_rt) August 9, 2024
இந்நிலையில் பலரும் இந்த விசாரணை எந்தவித அரசியல் தலையீடுகள் இன்றி நடத்தப்பட வேண்டும் என்றும் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்திற்குத் தகுதி பெற்றிருப்பதால், அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து, "அனைத்து விளையாட்டுகளுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அதேசமயம் அந்த விதிமுறைகள், முடிவுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டும் இருக்கின்றன. அவ்வகையில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீட்டிற்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
நியாயமான முறையில், விதிகளுக்கு உட்பட்டு, கடுமையாகப் போராடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் வினேஷ் போகத். வெள்ளிப் பதக்கத்திற்கு முழுத் தகுதியானவர் அவர். அவருக்கு உரிய வெள்ளிப் பதக்கத்தை அவரிடமே கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும், அதுவே அந்த விளையாட்டிற்கும் அர்த்தம் சேர்ப்பதாக இருக்கும்.
பாரிஸின் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) வினேஷ் போகத்திற்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும், நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


