Gpay-ல பணம் அனுப்பும்போது மாத்தி அனுப்பிட்டீங்களா..? திரும்ப பெற வழிமுறைகள் இதோ..!
பாஸ்புக், மணி ஆர்டர், செல்லான், டெபாசிட், ஏ.டி.எம் போன்ற வார்த்தைகள் கேட்பதே அரிதாகிப்போன கடந்த ஆறேழு வருடங்களில் ஜீ.பே, ஃபோன் பே, யு.பி.ஐ-யுமாக மாறியிருப்பது பல வகையில் நன்மை பயப்பதாக இருந்தாலும், சில சிரமங்களுக்கு நம்மை ஆளாக்குகிறது என்பதே உண்மை. வங்கிக்குச் சென்று மற்றவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யும்போது நம் கவனக்குறைவால் மாற்றி அனுப்பிவிட்டால், அப்போதே வங்கி மேலாளரிடம் விவரத்தைச் சொல்லி திரும்பி பணத்தைப் பெற முயற்சி செய்வோம். இல்லை பணத்தை பரிவர்த்தனை செய்வதற்குமுன் திரும்பப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையாவது இருக்கும்.
ஆனால், மொபைல் மற்றும் இணையவழி வங்கி சேவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இருந்த இடத்திலேயே பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்ற நிலை உருவானது. இது எளிதானதாக இருந்தாலும், தொடர்ந்து நடக்கும் யு.பி.ஐ வழி மோசடிகள், மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல முடியும். தவறுதலாகச் செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியுமா, எப்படி பெறுவது, யாரைக் கேட்பது என்கிற குழப்பங்கள் மக்களுக்கு இருக்கின்றன.
பணத்தை தவறான யு.பி.ஐ ஐட-க்கோ மொபைல் எண்ணுக்கோ செலுத்திவிட்டாலும், உங்கள் அங்கீகாரம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருந்தாலும், ஒருவேளை நீங்கள் மோசடி செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடான வழியில் உங்கள் பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் பரிவர்த்தனை தோல்வி அடைந்தபோதிலும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணம் டெபிட் ஆகியிருந்து, நீங்கள் பணம் செலுத்த வேண்டியவருக்கு பணம் சென்றடையாமல் இருந்தாலும், நீங்கள் தாராளமாக உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்யலாம்.
பணம் பரிவர்த்தனையைத் திரும்ப பெற நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்:
சம்பந்தப்பட்ட நபரை தொடர்புகொள்ளுதல்: அதாவது நீங்கள் பணத்தைத் தவறாகச் செலுத்திய அந்த நபரை அணுகி உங்கள் நிலமையை விவரியுங்கள். அவர் ஒப்புக்கொண்டால் உங்களுக்கு பணத்தை அவரே திருப்பி அனுப்பலாம்.
வங்கியின் வாடிக்கையாளர் சேவை: சம்பந்தப்பட்ட நபர் ஒப்புக்கொள்ளாத நிலை அல்லது அவரை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகாரளியுங்கள். அவர்கள் உங்களுக்கு பரிவர்த்தனையை திரும்ப பெற வழிகாட்டுவார்கள்.

யு.பி.ஐ பரிவர்த்தனை ரி-கால்: நீங்கள் அனுப்பிய பணத்தை திரும்பப் பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. உங்கள் வங்கியில் இந்த அம்சம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
என்.பி.சி.ஐ ஹெல்ப் டெஸ்க்: நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), மின்னஞ்சல் (upi@npci.org.in) அல்லது அவசர உதவி எண்ணை (022-4000-9100) தொடர்பு கொள்ளலாம். பணம் மாற்றி அனுப்பப்பட்ட சில மணி நேரங்கள் நீங்கள் பணத்தைத் திரும்ப பெற முயற்சி செய்ய வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


