Gambhir: எடுபடாத கம்பீர் மேஜிக்; திணறிய பேட்டர்கள் - இலங்கைக்கு எதிரான தொடரை இந்தியா எப்படி இழந்தது?

ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவுக்கான அறிவிப்பு வருவது போல் வந்தது இந்திய‌ அணிக்குக் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் ஆகிறார் என்னும் தகவல்.

பல ஆண்டுகளாகப் படுத்திருந்த கொல்கத்தா அணிக்கு ஐ.பி.எல் கோப்பையை வென்று தந்த கையோடு கம்பீர் பொறுப்புக்கு வந்ததால் அத்தனை பேரும் காம்பீரின் புதிய பயிற்சியாளர் அவதாரத்துக்காகக் காத்திருந்தனர். ஆனால் முதல் ஒரு நாள் தொடரிலேயே இலங்கைக்கு எதிராகத் தோல்வியைத் தழுவி அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது கம்பீரின் புதிய இந்தியா.‌

gautam gambhir

எப்போதும் இது போன்ற இரு நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் வெற்றி பெற்று ஐ.சி.சி தொடர்களில்தான் இந்தியா கோட்டை விடும். ஆனால், இந்த முறை இலங்கைக்கு எதிரான தொடரிலேயே தோல்வியைப் பெற்றதால் ரசிகர்கள் விடை தெரியாமல் விரக்தியிலுள்ளனர். அதுவும் அடுத்தாண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குக் கூட தகுதி பெறாத இலங்கை அணி உடன் தோல்வி பெற்றிருப்பதால் இது ரசிகர்களுக்கு வேதனையைக் கொடுத்திருக்கிறது.‌

வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சகஜம் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அத்தோல்வி எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பது அடுத்த வெற்றிக்கான அடிப்படை பணிகளில் ஒன்று.‌ அந்த வகையில் இந்தியா இந்த தோல்வியைச் சந்தித்ததற்கான முக்கிய காரணம் பேட்டர்களின் பொறுப்பற்ற ஆட்ட முறைதான் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. ரோகித் தவிர அத்தனை வீரர்களும் அரைத் தூக்கத்தில் ஆடுவது போலத்தான் இருந்தார்கள்.

rohit

நேரே வரும் பந்துகளைச் சுழலுக்கு ஆடுவது, திரும்பும் பந்துகளை நேரே அடிப்பது என்று ஆடினார்கள்.‌ கோலி போன்ற சீனியர் வீரரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் வந்து டெஸ்ட் விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் சுழலுக்குத் தடுமாறுவது போல இலங்கை சுழலில் இந்தியா சிக்கிக் கொண்டது. காலம் காலமாகச் சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் ஆடி வரும் இந்திய வீரர்கள் இப்படி சுழலைப் பார்த்ததும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறியதுதான் அதிர்ச்சி.

பேட்டிங் சரிவு குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் இரண்டு விஷயங்களைக் கூறியிருந்தார். ஒன்று வீரர்கள் தைரியமாக அட்டாக்கிங் ஷாட்கள் அடிக்க முடியாததைக் குறிப்பிட்டு இருந்தார். பந்து சிறிதளவு திரும்பத் தொடங்கியதுமே பௌண்டரிகளை குறைத்துக் கொண்டு வெறுமனே தடுப்பாட்ட கிரிக்கெட்டை மட்டுமே வீரர்கள் முன்னெடுத்தனர். ரோகித்தின் ஸ்ட்ரைக் ரேட்டையும் மற்றவர்களின் ஸ்ட்ரைக் ரேட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது நன்கு புரியும். அதே போல் ரோகித் அரை சதம் கடந்து ஆட்டமிழந்த போதும் அந்த அடித்தளத்தைப் பயன்படுத்த முடியாமல் பரிதாபமாக இந்தியா சரணடைந்ததும் ரோகித்தின் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

indian team

ஓவருக்கு 8 ரன்கள் என்று டி20 போன்று விளையாட விட்டாலும் ஓவருக்கு குறைந்தபட்சம் ஐந்து ரன்கள் என்றாவது ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஆட வீரர்கள் கற்க வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் சரியாக ஆட உள்ளூர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து வீரர்களை அணிக்குள் கொண்டு வருதல் அவசியம்.‌ ஐ.பி.எல் கிரிக்கெட்டை மட்டும் அளவுகோலாகக் கொண்டு வீரர்களை எடுத்தால் அது இது போன்ற ஆடுகளங்களில் பலன் தருமா என்னும் கேள்விக்குறியை இந்த தொடர் கொடுத்து உள்ளது.

மேலும் இலங்கை வீரர்கள் போல நம்மாட்கள் ஸ்வீப் ஷாட் ஆடவில்லை என்பதையும் ரோகித் கூறியிருந்தார். இது போன்ற கடினமான ஆடுகளங்களில் ஸ்வீப் ஆடவும் அதிக தைரியம் வேண்டும்.‌ வீரர்களின் மனதளவில் வர வேண்டிய மாற்றம் இது. பயிற்சியாளர்கள் உடலளவில் மாற்றத்தைக் கொண்டு வருவதோடு விட்டுவிடாமல் வீரர்களின் மனதளவிலும் வலிமையை ஏற்படுத்த முயல வேண்டும். அப்போது தான் செமி ஃபைனல், ஃபைனல் போன்ற அழுத்தம் நிறைந்த ஆட்டங்களில் அதிக வெற்றிகளைக் குவிக்க முடியும்.

SL

தொடரைத் தோற்றிருந்தாலும் ஹர்திக், பும்ரா, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல்தான் இந்தியா ஆடி இருந்தது. மேலும் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் டாஸ் தோற்று இருந்தது.‌ அத்தனை ஆட்டங்களிலும் மிக மெதுவான மைதானங்களிலேயே ஆடியது. இனி வரும் போட்டிகளில் இத்தனை துரதிருஷ்டங்கள் இந்தியாவுக்கு நிச்சயம் வரப்போவதில்லை. இருந்தாலும் இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாடம் கற்பது மிக அவசியம். ஸ்பின்னை தைரியமாக அடித்து விளாசும் மனநிலை, கடினமான நேரங்களில் தவறாமல் நின்று பார்ட்னர்ஷிப் அமைக்கும் வழிமுறைகள் போன்றவற்றை இந்திய வீரர்கள் கற்க வேண்டும்.

ரியான் பராக் பேட்டிங்கோடு நில்லாமல் பந்தும் வீசுவது ஆறுதலான விசயம். இதற்கு முன்பு ஆல் ரவுண்டர்களாக வந்தவர்கள் எல்லாம் பேட்டிங் வீரர்களாகச் சுருங்கிப் போனது போல இவரும் போகாமல் இருக்க வேண்டும். சிவம் தூபே பவர் பிளே பவுலராகவும் தன்னை நிரூபித்தது இந்தியாவுக்கு மற்றொரு நல்ல செய்தி.

gautam gambhir

ஒருவேளை அரசியல் காரணங்களுக்காக அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைப் புறக்கணிக்கக் கூடும்.‌ அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவேளை இலங்கையில் இந்தியா விளையாட நேர்ந்தால் இது போன்ற கடினமான ஆடுகளங்களில் விளையாட வேண்டிய கட்டாயம் வரும். அப்போதும் இப்போது போல கண்மண் தெரியாமல் ஆடினால் மாஸ் கமர்ஷியல் சினிமாவாக ஆரம்பித்த கம்பீரின் பயிற்சியாளர் பரிமாணம் அதே படத்தின் லொல்லு சபா வெர்ஷன் போல மாறிவிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.