Doctor Vikatan: டூ வீலர் ஓட்டும்போது கண்களில் பூச்சி, தூசு விழுந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

Doctor Vikatan:   டூ வீலர் ஓட்டும்போது சில சமயம் கண்களில் பூச்சியோ, தூசியோ விழுகிறது. சில மணி நேரத்துக்கு கண்களில் வலி இருக்கிறது. பூச்சி வெளியே வந்துவிட்டதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது... கண்களில் பூச்சி அடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷோபா கினி.

கண் மருத்துவர் ஷோபா கினி

டூ வீலர் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது மிக அவசியம். வருமுன் காப்பதற்கு வைஸருடன் உள்ள ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது. வாகனம் ஓட்டும்போது கண்ணாடி அணிந்து கொள்வதும் சிறந்தது.

டூ வீலர் ஓட்டும்போது கண்களுக்குள் பூச்சியோ, தூசியோ விழுந்தால் உறுத்தல், எரிச்சல், நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இப்படி ஏதேனும் நடந்தால் கண்களை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். டூ வீலர் ஓட்டுபவர்கள் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீரை கைவசம் வைத்திருப்பது இதுபோன்ற நேரத்தில் உதவும். தண்ணீரால் கழுவியதும் உறுத்தல் குறைந்துவிட்டால் கண்ணிலிருந்து பூச்சி வெளியே வந்துவிட்டது என அர்த்தம். சில சமயங்களில் அந்தப் பூச்சி கடித்துவிடலாம். அது விஷத்தன்மை உள்ள பூச்சி என்றால் அந்த விஷத்தன்மை கண்களை பாதிக்க வாய்ப்புள்ளது.

பூச்சி கடித்திருக்கும் பட்சத்தில் உடனே கண் மருத்துவரை அணுகுவது நலம்.

கண்கள் சிவந்து, நீர்வடிதல்

மருத்துவர் கண்களைப் பரிசோதித்துப் பார்த்து,  பாதிப்புக்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரைப்பார். கன்ஜங்ட்டைவா (conjunctiva) எனப்படும் விழியின் வெண்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் சலைன் வாஷ் சிகிச்சை கொடுக்கப்படும். அதுவே கருவிழியிலோ, கண் இமைகளின்  உள் பகுதியிலோ பாதிப்பு என்றால் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு, உள்ளிருக்கும் தூசு அல்லது பூச்சியை நீக்கிவிடலாம்.

சிலசமயங்களில் பூச்சி வேகமாக அடிக்கும்பட்சத்தில், அது கண்களை ஊடுருவிச் சென்றிருந்தால்,  மேஜர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். கண்களில் நீர்வடிதல், எரிச்சல், சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டு சிகிச்சைகளை முயற்சி செய்யாமல் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

கண்களில் எண்ணெய் விடுவது, கண்ணில் விழுந்த பூச்சியை  நாக்கினால்  தடவி எடுக்க முயல்வது போன்ற எதையும் செய்யக் கூடாது. இதெல்லாம் கருவிழியைப்  புண்ணாக்கும் கார்னியல் அல்சர் பிரச்னைக்கு வழி வகுக்கும் என்பதால் கவனமாக இருக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.