நெல், நிலக்கடலை, உளுந்து... ரூ.3,500 மானியத்தில் விதை போடும் கருவி; அழைக்கும் வேளாண் பொறியியல் துறை

தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறுவை சாகுபடி செய்யும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் உரமிடும் கருவியை மானியத்தில் வழங்குகிறது.

யாருக்கு எவ்வளவு மானியம்?

கருவி

அதன்படி சிறு, குறு, பெண், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 8,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

விதை மற்றும் உரமிடும் கருவியானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. விவசாயிகள் விதையிடும் கருவியைக் கொண்டு நிலக்கடலை, நெல், உளுந்து, மக்காச்சோளம், ஆமணக்கு, கம்பு, வரகு உள்ளிட்டவற்றை எளிதாக விதைக்கலாம்.

கருவி

விதையிடும் கருவியால் என்னென்ன விதைக்கலாம்?

இக்கருவியைக் கொண்டு வயல்களில் விதைப்பு பணி மேற்கொள்வதன் மூலம், அதற்கான செலவை கணிசமாகக் குறைக்க முடியும். குறிப்பாக மானாவாரி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இக்கருவியின் மூலம் பயிர் அரையடி முதல், மூன்றடி இடைவெளியிலும், வரிசைக்கு வரிசை குறைந்தது அரை அடி முதல் நமது தேவைக்கேற்ப இடைவெளியிலும் விதைக்க இயலும் என்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

கருவியை எப்படி பெறுவது?

தமிழ்நாடு அரசின் மானியத்துடன் விதைப்புக் கருவியை பெற விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையை அணுகலாம். இதுதவிர, கீழ்காணும் க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, விதை மற்றும் உரமிடும் கருவியை மானிய விலையில் பெறுவது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம் என வேளாண்மை பொறியியல் துறை தெரிவித்துள்ளது.

கருவிகள் குறித்து ஸ்கேன் செய்து அறியலாம்

இதுகுறித்து வேளாண்மைப் பொறியியல் துறையினரிடம் பேசியபோது, "விதை போடும் கருவியில் பல வகைகள் உள்ளன. அதில் சிறிய வகையான கருவி இது. இதிலேயே பெரிய வகையான கருவிகளும் உள்ளன. இது கைகளால் இயக்கக்கூடிய கருவி. இதன் விலை 7,500 ரூபாய். மானியத்தில் 3,500 ரூபாய்க்கு வழங்குகிறோம். தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இந்தக் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.