`உன்னாலதான் படம் ஓடலைனு கேலி பண்றது என்னைக் காயப்படுத்துது! - பிரியா பவானி சங்கர் ஓப்பன் டாக்

சோசியல் மீடியாவில் எப்போதும் நடிகர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரைப் பற்றிய கேலி, நையாண்டி பதிவுகளுக்குப் பஞ்சமே இருக்காது.

தான் யார் என்பது இந்த கேலி பதிவைப் பார்ப்பவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தைப் பயன்படுத்திக் கொண்டு எல்லை மீறி கேலி செய்து வருகின்றன சில சோசியல் மீடியா பக்கங்கள். நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்த ரத்னம், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அடுத்த ரிலீஸாக இவர் நடித்திருக்கும் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Priya Bhavani Shankar in Indian 2
சமீபத்தில் இவர் குறித்தான கேலி பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. "பிரியா பவானி சங்கர் நடித்தாலே அத்திரைப்படம் உறுதியாகத் தோல்வியைதான் சந்திக்கும். அவர் ஒரு பேட்லக்" என்பதுபோன்ற எல்லைமீறிய பல கேலி பதிவுகளையும், மீம்களையும் பார்க்க முடிந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் இது தொடர்பாக விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நம்மிடையே பேசத் தொடங்கியவர், "ஷங்கர் சார் இயக்கத்துல கமல் சார் நடிக்கிற படத்துல கூட சேர்ந்து நடிக்கிறதுக்கு யார்தான் வேண்டாம்னு சொல்வாங்க?! நானும் படத்துல அதிகமான நேரம் வருவேன். எதிர்பாராத விதமாக இந்தியன் 2 படத்தோட படப்பிடிப்பு 5 வருடங்களுக்கு நீண்டிருச்சு. எனக்கு மிகப்பெரிய ஆளுமைகளோட அதிகமான நேரம் செலவிடுறதுக்கும் அப்போ வாய்ப்பு கிடைச்சது. ஷங்கர் சார்கிட்டையும் கமல் சார்கிட்டையும் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

Priya Bhavani Shankar | பிரியா பவானி சங்கர்

புதுமுக நடிகர்களையும் ரொம்பவே நல்ல முறையில நடத்துனாங்க. ஒரு படம் ஹிட்டாகக்கூடாதுங்கற எண்ணத்தோட படக்குழுவுல யாரும் வேலை பார்க்க மாட்டாங்க. ஒரு படத்தை ஹிட்டாக்குறது ஒருத்தருடைய வேலை மட்டும் கிடையாது. இந்தியன் 2 படத்தோட ரிலீஸுக்குப் பிறகு நான் பின்னடைவைச் சந்திச்சேன். என்னோட இதற்கு முந்தைய படங்களும் கமர்ஷியலாகப் பெரியளவுல போகாததுனாலதான் அந்தப் பின்னடைவு.

நீ இருந்ததுனாலதான் இந்தப் படம் சரியா போகலைனு சொல்றாங்க. இந்த மாதிரியான விஷயங்கள் என்னைக் காயப்படுத்துது. என்கிட்ட யாராவது திரும்ப 5 வருஷத்துக்கு முன்னாடி போக வாய்ப்புகிடைச்சு இந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பீங்களானு கேட்டால்... நான் நிச்சயம் இந்தப் படத்துல நடிப்பேன். எனக்கு அதிகமான போர்ஷன் இருக்கிற ஷங்கர் சார் - கமல் சார் படத்தை நான் மிஸ் பண்ணமாட்டேன். நான் அந்த வாய்ப்புக்கு ரொம்பவே மரியாதைக் கொடுப்பேன். நான் அந்தப் படத்துல இருக்கிற மனிதர்களுக்கு மரியாதைக் கொடுப்பேன்.

மக்களோட எதிர்பார்ப்பை படம் பூர்த்தி பண்ணல. அதுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். கடைசியாக 5 வருஷத்துக்குள்ள வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிற பெரிய ஹீரோக்களோட படங்கள்ல உங்களுக்கு நினைவுல இருக்கிற பெண் கதாபாத்திரங்கள் பத்திச் சொல்லுங்க. அப்படித்தான் அந்தப் பெண் கதாபாத்திரங்களை எழுதியிருக்காங்க.

Priya Bhavani Shankar | பிரியா பவானி சங்கர்

எழுதியிருக்கிற கதாபாத்திரத்துலதான் நாம நடிக்க முடியும். இவ்வளவு பெரிய படத்துல அதிக ஸ்பேஸ்ல நடிக்கிறதுக்கு எந்தக் கதாநாயகிதான் மறுப்பு தெரிவிப்பாங்க. யாருமே வேண்டாம்னு சொல்லமாட்டாங்க. இந்தப் படத்துனால என்னை நோக்கி வைக்கிற கேலி விமர்சனங்கள் என்னைக் காயப்படுத்துது. எல்லோரையும் இதுமாதிரியான கேலி வசனங்கள் காயப்படுத்தும்தானே?!

ஒரு ஐடி கம்பெனில ஒரு புராஜெக்ட்டுக்கு 200 பேர் வேலைப் பார்க்கிறாங்க. ஆனா, அந்த புராஜெக்ட் சரியாக இல்லாததுக்கு ஒருத்தரை மட்டும் காரணம் சொல்லும்போது எந்தளவுக்கு வலிக்குமோ அப்படிதான் எனக்கும். என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்கிறது அதே ஆடியன்ஸ்தான். அவங்களோட விமர்சனத்துக்கு நான் மரியாதை கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி வரும் காலங்கள்ல நல்ல படங்கள் பண்ணுவேன். ட்ரோல் பண்ணலாம். நானும் அந்த மாதிரியான விஷயங்களைப் பார்த்து சிரிச்சுட்டு கடந்துபோயிடுவேன்.

Priya Bhavani Shankar | பிரியா பவானி சங்கர்

நானும் ஒரு பார்வையாளன்தான். எனக்கும் ஒரு படம் எதுனால ஒர்க் ஆகலைன்னு தெரியும். சோசியல் மீடியாவுல என்னைக் கேலி பண்றவங்க நேர்ல என்கிட்ட அதைப் பத்திப் பேசவேமாட்டாங்க. சோசியல் மீடியாவுல நான் யாருன்னே தெரியாது, என் முகம் யாருக்கும் தெரியாதுங்கிற விஷயத்துனால தொடர்ந்து வன்மத்தைக் கொட்டுறாங்க. எந்தவொரு நடிகரையும் இவராலதான் படம் சரியாகப் போகல இவர் பேட்லக்ன்னு சொல்லமாட்டாங்க. இது முழுக்க முழுக்க பெண் வெறுப்பு (Misogynist) சிந்தனைதான்" எனப் பேசி முடித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.