வலது, இடது - எந்த பக்கம் அடிப்படைவாதம் பேசினாலும் தவறுதான்!- Brinda இயக்குநர் சூர்யா மனோஜ் வாங்கலா
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவின் முதல் வெப் சீரிஸான ‘பிருந்தா’ சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுவருகிறது. அறிமுக இயக்குநர் சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ள இந்த திரில்லர் வெப் தொடர், தெலுங்கு தவிர்த்து, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. நரபலி, மதவெறி, கடவுள் நம்பிக்கை ஆகிய விஷயங்களை மையமாக வைத்து நகரும் இந்தத் தொடரைப் பற்றி இயக்குநர் சூர்யா மனோஜ் வாங்கலாவிடம் பேசியதிலிருந்து...
பிருந்தா வெப் சீரிஸுக்கான யோசனை எங்கிருந்து தொடங்கியது?
"12 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். பல மனிதர்களைப் பார்ப்பது, பேசுவது, பயணம் செய்வது என்றிருந்த எனக்கு, படமாக எடுக்க நிறையக் கதைகள் இருந்தன. இருந்தும் எழுதத் தொடங்கியதிலிருந்து குறைந்தது 50 முறையாவது வேண்டாமென நிறுத்திய இந்த கதையைத்தான் இணையத் தொடராக எடுத்துள்ளேன். எழுத்தளவில் மிகவும் சவாலாக இருந்த இந்தக் கதையைத் தொடர்ந்து எழுதக் காரணம், கடந்த 10 வருடங்களாக இந்தியா, தீவிரமாக மதத்தை மையப்படுத்தி இருக்கும் நிலையைப் பார்த்துத்தான். அது மட்டுமில்லாமல் கடவுள், மதம், தீவிர வலதுசாரி, தீவிர இடதுசாரி குறித்து எனக்குள் இருந்த கேள்விகளும் என்னை எழுத வைத்தன. மிக முக்கியமாக இங்கே இந்தத் தரப்பினரிடையே சகிப்புத்தன்மையே இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒரு சிலருக்கு மக்கள் சாதாரணமாகத் தெய்வத்தை வணங்குவதையே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மற்றும் சிலருக்கு மதவெறி அதிகமாகி அடுத்தவர்களைச் சாதாரணமாகத் துன்புறுத்தும் இடத்திற்குச் செல்கிறார்கள். இது ஆரோக்கியமில்லாத ஒரு சமூகத்துக்கு உதாரணம். இப்படி நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரச்னைகள் நம் வீட்டு வாசலில் நடக்க, எப்படி நம்மால் அமைதியாக இருக்க முடியும் என்கிற கேள்வி எனது மனதில் தோன்றியது. எந்த விதத்தில் அடிப்படைவாதியாக இருந்தாலும் தவறுதான் என்ற எண்ணம் வந்தது. ஆகையால் இருவரும் செய்யும் தவற்றில் இருக்கும் பிழையைச் சுட்டிக் காட்டும் நடுநிலைவாதியாக இருப்பதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்று தோன்றியது. அதுவே இந்தக் கதையின் யோசனையின் தொடக்கம்."
த்ரிஷா எப்படி இந்தக் கதைக்குள் வந்தார்? அவருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது?
"நான் கதையை யோசித்து எழுதும்போது யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் இந்தக் கதைக்கு மிகவும் முதிர்ச்சியான, அதே நேரத்தில் கதையின் சின்ன சின்ன நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய, ஸ்மார்ட்டான ஒருவர் தேவைப்பட்டார். அதுவும் எனது வயதுக்கு மீறிய ஆழமான கதைக்களம். அதைப் புரிந்துகொள்ள ஆழமான சிந்தனையாளரைக் கதை தேடியது. அந்தச் சூழலில் என்னுடைய தயாரிப்பாளர் ஆஷிஷ் த்ரிஷாவின் பெயரைப் பரிந்துரைத்தார். உடனே கதையை அவருக்கு அனுப்பி வைத்தோம். என்னை நேரில் சந்திப்பதற்கு முன்பே கதையைப் படித்து ஓ.கே சொல்லிவிட்டார் த்ரிஷா. அதே போலப் படப்பிடிப்பின் முதல் நாள் முதல் ஷாட்டிலேயே நான் திரையில் காண ஆசைப்பட்ட பிருந்தாவை என் கண்முன் நிறுத்திவிட்டார். அவரது 20 வருடத் திரைத்துறை அனுபவம் எங்களைச் சுற்றி பாசிட்டிவ் vibe-ஐக் கொண்டுவந்தது."
தொடரின் கலை இயக்கமும், இசையும் மிரட்டலாக இருந்தன... உங்கள் தொழில்நுட்ப குழு குறித்து…
"நான் ‘கிருஷ்ண காடி வீர பிரேம காதா’ என்ற படத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதில் பணிபுரிந்த பலர் இந்த சீரிஸிலும் பணிபுரிந்திருக்கிறார்கள். கலை இயக்குநர் கொல்லா அவினாஷ் அந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு அறிமுகமானார். எங்கள் நட்பு பத்து வருடமாகத் தொடர்கிறது. இப்போது அவர் ஷங்கர், மணிரத்னம் போன்ற தேசிய விருதுகள் பெற்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியிருக்கிறார். தெலுங்கு சினிமாவில் முக்கியமான கலை இயக்குநர். இருந்தும் அறிமுக இயக்குநரான எனது படத்தில் பணிபுரிந்திருக்கிறார். அடுத்து, இசையமைப்பாளர் சக்தி காந்த் கார்த்திக் அவருக்கும் எனக்கும் 13 வருட நட்பு இருக்கிறது. அவர் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஃபிடா என்கிற பிளாக்பஸ்டர் படத்தின் இசையமைப்பாளர். அதே போல ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவும் 8 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். மிகவும் கறாராகவே ஸ்க்ரிப்ட்டினைத் தேர்வுசெய்வார். அவர் இந்தப் படத்துக்காக எந்தப் படத்தின் ரெபெரென்ஸையும் ஒளிப்பதிவில் பயன்படுத்தவில்லை. மாறாக, அவர் ஒளியுணர்வுக்காக காட்டியதெல்லாம் மேற்கத்திய ஓவியங்களைத்தான். அதிலிருந்துதான் பேலட்டினைத் தேர்வு செய்தார். அவரது உழைப்பு இரவு நேரக் காட்சிகளைச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறது. இப்படி என்னுடைய நட்பு மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் அனுபவமிக்க கலைஞர்கள் இந்தத் தொடரில் பணியாற்ற காரணமாக அமைந்தது."
படப்பிடிப்பில் சவாலாக இருந்த விஷயங்கள் குறித்து…
"பொதுவாக ஒரு நாள் ஷூட்டிங்கில் இவ்வளவு நிமிடங்கள் ஓடும் காட்சிகள் ஷூட் செய்ய வேண்டும் என்ற வரையறை உண்டு. ஆனால் சோனி ப்ரொடெக்ஷன் தளத்தைப் பொறுத்தவரை அந்த வரையறை சற்றே அதிகம்... அதே நேரத்தில் ஒரு திரைப்படத்திற்கான தரமும் இருக்க வேண்டும் என்கிற கறார் கொள்கை இருந்தது. இப்படியான சூழலில் வேலை செய்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. அதேபோல படப்பிடிப்பில் மிகவும் சவாலாக இருந்தது அந்த க்ளைமாக்ஸ் காட்சிதான். ஒரு கோயில் குளக்கரை காட்சியில் 2000 ஜூனியர் ஆர்டிஸ்ட், பிரதான ஆர்ட்டிஸ்ட் உட்படப் பலரின் ஆக்ஷன்கள் அதில் பதிவு செய்ய வேண்டிய தேவை இருந்தன. அத்தகைய ஜனதிரள்கள் இருக்கும் காட்சியை 4 நாள்களில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் எங்களுக்கு 2 நாள்கள்தான் கிடைத்தன. அதிலும் த்ரிஷாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவரது காட்சிகளை ஒரே நாளில் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையெல்லாம் சவாலாக எடுத்து வெற்றிகரமாகப் படப்பிடிப்பை முடித்தோம்."
"இந்தத் தொடர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதாகத் தெரிகிறது. அதாவது நரபலியில் பாதிக்கப்பட்ட ஒருவரின் நியாயத்தைப் பேசுகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒருவரைப் பகுத்தறிவுள்ள நபராகச் சித்தரித்துவிட்டு, பின்னர் ஒரு தொடர் கொலையாளியாக மாற்றியது ஏன்? இதில் யார் பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்?"
"தொடர் கண்டிப்பாக மதவெறியைச் சாடுகிறது. ஆனால் அந்தப் பாத்திரத்தை நான் வில்லனாகத்தான் காட்டியிருக்கிறேன். ஏனெனில் அவனுக்குச் சாதாரணமாக சாமி கும்பிடுபவர்களையும், மத நம்பிக்கை உடையவர்களையும் பிடிக்கவில்லை. இங்கே மக்களுக்கு தங்கள் சுமையை இறக்கி வைக்க ஏதாவது ஒரு துணையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது. ஆனால் சத்யாவுக்கு இப்படியான நபர்களையே பிடிக்கவில்லை. அப்பாவிகளைக் கொல்கிறான். அதனால்தான் அவன் வில்லனாகிறான். நான் இந்தத் தொடரை வைத்துச் சொல்ல விரும்பியது, எப்படி தீவிர வலதுசாரிகள் ஆபத்தானவர்களோ, அதே போலத் தீவிர இடதுசாரிகளும் ஆபத்தானவர்கள் என்பதுதான். அவனுக்குப் பாவமான பின்கதை இருப்பதால் அப்பாவிகளைக் கொன்றுவிட முடியாது. அதுவே நான் சொல்ல விரும்பியது. கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்களைக் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது."
பிருந்தா சீசன் 2 வர வாய்ப்பிருக்கிறதா? அடுத்து என்ன..?
"த்ரிஷா மேடம் அடுத்த சீசனுக்கு எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். எனக்கும் இரண்டாவது சீசன் செய்ய வேண்டும் என்ற யோசனையும் ஆர்வமும் இருக்கிறது. எனது தயாரிப்பாளரும் விருப்பம் தெரிவித்துள்ளார். அது இப்போதே தொடங்குமா அல்லது சிறிது இடைவெளிக்குப் பிறகு தொடங்குமா என்பது சோனி லைவ் நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது. நான் அடுத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறேன். இந்தத் தொடர், பொறுமையும், நேர்மையும் இருந்தால் நாம் அடுத்தகட்டத்துக்கு நகரலாம் என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இனிவரும் படைப்புகளிலும் அதைப் பின்பற்றுவேன்!"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


