ரூ.2,000 கோடி போதைப்பொருள் வழக்கு: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை விடுவித்த மும்பை ஹைகோர்ட்!
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் 2016-ம் ஆண்டு 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மருந்து தயாரிப்பதாக கூறி போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருள் தயாரித்த தொழிற்சாலை உரிமையாளர் மனோஜ் ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் இதில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சோலாப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள் கென்யாவிற்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1,300 கிலோ கென்யாவிற்கு அனுப்பப்பட்டது தெரிய வந்தது. 2016-ம் ஆண்டு கென்யாவில் விக்கி கோஸ்வாமி மற்றும் சில கடத்தல்காரர்கள் கலந்து கொண்டு சோலாப்பூரில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருளை எப்படி கென்யாவிற்கு கடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா குல்கர்னியும் கலந்து கொண்டதாக போலீஸார் குற்றம்சாட்டி இருக்கின்றனர். அதோடு மும்பையில் உள்ள மம்தா குல்கர்னியின் மூன்று வீடுகளுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர். மம்தா குல்கர்னி தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பாரதி, மஞ்சு ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் மம்தா குல்கர்னி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தோரட், ``கென்யாவில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எனது மனுதாரர் கலந்து கொண்டதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயல்களுக்கு எனது மனுதாரர் பொறுப்பேற்க முடியாது. கென்யா கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது மனுதாரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர்கள் இருவரின் விசாரணையை எனது மனுதாரர் எதிர்கொள்ள முடியாது" என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``சோலாப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருளை உலகம் முழுவதும் எப்படி கொண்டு செல்வது என்பது தொடர்பாக கென்யாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா குல்கர்னி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்றார். இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், போதைப்பொருள் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக மட்டும் தண்டிக்க முடியாது. இவ்வழக்கு விசாரணை அற்பத்தனமாகவும் எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது என்று கூறி, மம்தா குல்கர்னி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


