புதுச்சேரி: கைதுசெய்யச் சென்றவரை குடும்பத்துடன் `கொடூரமாக தாக்கிய கஞ்சா ரௌடிகள்... கோமாவில் காவலர்!

புதுச்சேரியில் நிலவும் கஞ்சா புழக்கமும், அதனால் அன்றாடம் அதிகரிக்கும் குற்றங்களும் அம்மாநில மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பூ வியாபாரி ரத்தினவேல். இவருக்கும் வில்லியனூரைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. அதன் காரணமாக கடந்த ஜூலை 28-ம் தேதி தனது நண்பர்களுடன் முத்தியால்பேட்டைக்குச் சென்ற நவீன், பூக்கடையில் இருந்த ரத்தினவேலுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். அந்த சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்த முத்தியால்போட்டை போலீஸார், நவீனை கைது செய்து விசாரணை செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், வில்லியனூர் அம்மா நகரைச் சேர்ந்த கஞ்சா விற்கும் ரௌடி சதீஷ் என்பவரையும் அந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்தனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் வசந்தராஜ்

ஆனால் ரௌடி சதீஷ் கஞ்சா வியாபாரி என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் தெரியாததால், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தலைமைக் காவலர் வசந்தராஜின் உதவியை நாடியிருக்கிறார்கள் முத்தியால்பேட்டை போலீஸார். அப்போது சதீஷை கஞ்சா வழக்கில் பலமுறை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார் வசந்தராஜா. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலை அம்மா நகருக்குச் சென்ற காவலர் வசந்தராஜா, அங்கு சதீஷ் இருப்பதைப் பார்த்து கிரைம் டீம் மற்றும் முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் வருவதற்குள் சதீஷ் தப்பிவிடக் கூடாது என்று நினைத்த வசந்தராஜா, வீட்டிற்குள் சென்று அவரை மடக்கி கையில் விலங்கு மாட்டியிருக்கிறார்.

அப்போது இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த சதீஷின் மனைவி ராஜேஸ்வரி, தம்பிகள் பிரதீப் மற்றும் கிஷோர் (சிறார் - பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) உள்ளிட்டவர்கள், சதீஷை விடும்படி தகராறு செய்திருக்கிறார்கள். அப்படியும் சதீஷை விடுவிக்காததால், அந்த நால்வரும் செங்கல் மற்றும் கருங்கற்களால் வசந்தராஜின் தலையிலும், முகத்திலும் அடித்திருக்கிறார்கள். அதில் நிலைகுலைந்த வசந்தராஜை, குக்கரின் மூடியால் அடித்திருக்கிறார் சதீஷ். அதில் வசந்தராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழ, அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து அங்கு சென்ற போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வசந்தராஜாவை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதீப், சதீஷ்

மண்டை ஓடு நொறுங்கி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால், கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் வசந்தராஜா. இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ரௌடி சதீஷ், அவரின் மனைவி ராஜேஸ்வரி, தம்பிகள் பிரதீப் மற்றும் கிஷோர் போன்றவர்கள் நான்கு பிரிவுகளின் கீழ்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர் குற்றவாளிகளான சதீஷ் மற்றும்

அவரது தம்பி பிரதீப் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.