``இன்னொரு கட்சியின் தலைமையை நாம் தமிழர் கட்சி ஏற்க வாய்ப்பில்லை..!” - இடும்பாவனம் கார்த்திக் பளீச்
``கட்சியின் முக்கிய முகமாக திகழும் காளியம்மாள் அவர்களை கட்சியிலிருந்து நீக்க சீமான் திட்டமிடுவதாக தகவல்கள் வருகிறதே... லீக்கான ஆடியோவும் அப்படியே அமைந்திருக்கிறதே!”
``நாங்கள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். எங்களுக்குள்ளான தனிப்பட்ட மொழிநடைகளை பொதுவெளியில் விவாதத்துக்கு கொண்டு வருவதே நியாயமற்றது. இந்த விவகாரத்தை வைத்து சிண்டுமுடியப் பார்க்கிறது தி.மு.க. காளியம்மாளுக்காக இப்போது பேசும் தி.மு.க-வின் ராஜீவ் காந்தி, திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தி.மு.க-வினர் மது பாட்டில் வீசி தாக்கியபோது எங்கே போனார். குறிப்பாக இந்த விஷயத்தில் குற்றச்சாட்டை வைக்க வேண்டிய காளியம்மாளே வழக்கமான கட்சி பணிகளை மேற்கொள்கிறார். கட்சி மேடைகளிலும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். எனவே இதை பேசுவதே வீண்..!”
``இரண்டாம்கட்ட தலைவர்கள் வளருவதை தலைமை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் நீண்ட காலமாக இருக்கிறதுதானே!”
``அப்படியல்ல. கட்சியில் இணையும்போது தனிப்பட்ட எனக்கு மேடை பேச்சு பற்றிய புரிதல் கிடையாது. அக்கா காளியம்மாளை 2018-19 காலகட்டத்தில் கட்சியில் இணைத்து அவருக்கு ஊடக வெளிச்சம் கொடுத்து, எம்.பி சீட் கொடுத்தே அண்ணன் சீமான்தான். இப்படி பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும். அரசியல் புரிதல் கொண்டு இளைஞர்கள் கூட்டத்தை அண்ணன் சீமான் உருவாக்கிவரும்போது இதெல்லாம் அபத்தமான குற்றச்சாட்டு.”
``நா.த.க-வில் உட்கட்சி பிரச்னை அதிகரித்து வருகிறது போலயே... விலகிச் சென்ற வெற்றிக்குமரன் போன்றோர்கள் தனி அமைப்பையே தொடங்குகிறார்களே!”
`கட்சியில் கருத்து வேறுபாடுகளும் முரண்களும் ஏற்படுவது இயற்கையானது. ஒரு அரசியல் கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் இருப்பது வளர்ச்சிக்கான அறிகுறிதான். மேயரை ராஜினாமா செய்ய வைத்து தேர்தல் நடத்தியதிலும் குளறுபடியை சந்திக்கும் அளவுக்கு உட்கட்சி பிரச்னை எங்கள் கட்சியில் இல்லை. கட்சியைவிட்டு விலகி செல்வோர் தனி அமைப்பு தொடங்குவது அவர்கள் உரிமை. அதில் நா.த.க-வுக்கு எந்த பிரச்னையுமில்லை”
`2016 சட்டமன்ற தேர்தலிலிருந்து தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியாததால், 2026-ல் விஜய் அல்லது எடப்பாடி தலைமையை சீமான் ஏற்கப் போகிறார் என்ற பேச்சு நிலவுகிறதே..?”
``நாம் தமிழர் கட்சி இன்னொரு கட்சியின் தலைமையை ஏற்க வாய்ப்பில்லை. குறிப்பாக அ.தி.மு.க எங்களோடு கூட்டணி வைக்க விரும்பினாலும் தி.மு.க, அ.தி.மு.க-வோடு ஒருபோதும் கூட்டணியில்லை.”
``சூழலியல் பாதுகாப்புக்கு உதாரணமாக எப்போதும் கேரளாவை குறிப்பிடுவீர்கள், ஆனால் இந்த நிலச்சரிவுக்கு மனித தவறுகளும் மலை பகுதி ஆக்கிரமிப்புகளையுமே காரணமாக சொல்கிறார்களே ஆர்வலர்கள்..!”
``கேரளா அரசு நிர்வாக மற்றும் மனித தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை போல வளக் கொள்ளையோ.. இயற்கைக்கு எதிரான வேலைகளோ அங்கே நடக்கவில்லை. அப்படிபட்ட கேரளாவுக்கே இந்த நிலையென்றால் ஆக்கிரமிப்புகளும், வளக் கொள்ளைகளையும் தினம் தினம் சந்தித்துவரும் தமிழ்நாட்டின் மலை பகுதிகள் அபாய கட்டத்தில் இருக்கின்றன என்பதை புரிந்து, தமிழ்நாடு அரசு இதற்கு பிறகாவது விழித்து மணல், கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பெரும்பான்மை எம்.பிக்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. எனவே மாநில அரசை மட்டும் குற்றம் சுமத்தும் அமித் ஷா, தேசிய பேரிடராக இதனை அறிவித்து உரிய நிதியை முதலில் வழங்கட்டும்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


