Vinesh Phogat: வினேஷ் மீதும் தவறு இருக்கிறது; அவரும் பழியை ஏற்க வேண்டும் - சாய்னா நேவால் கருத்து
மல்யுத்தத்தில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன்மூலம் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் பறிபோனது. வினேஷ் போகத்திற்கு ஆதரவாகப் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து பா.ஜ.கயைச் சேர்ந்தவரும் இந்திய வீராங்கனையுமான சாய்னா நேவால் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பேசியிருக்கும் சாய்னா நேவால், "தற்போது வினேஷ் போகத் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
வினேஷ் போகத்தின் நிலையை விவரிக்க தற்போது வார்த்தைகள் இல்லை. நிச்சயம் அவர் இதிலிருந்து மீண்டு வருவார். வினேஷ் போகத் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர். அவருக்கு எது சரி, எது தவறு என்று நன்றாகவே தெரியும். எனக்கு மல்யுத்தத்தில் என்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் விதிகள் என்ன என்று வினோஷ் போகத்துக்கு நன்றாகவே தெரியும். அதனால் இப்படிப்பட்ட ஒரு தவறு நடந்திருக்கக் கூடாது. இது போன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்த தவற்றைச் செய்திருக்கக் கூடாது.
இது எப்படி நடந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. வினேஷ் போகத்துக்குத் துணையாகப் பெரிய ஒரு குழுவே இருக்கிறது. அவருக்குப் பயிற்சியாளர்கள், பிசியோஸ் எனப் பலரும் இருக்கிறார்கள். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் கிடையாது. தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அப்படி இருக்கும்போது விதிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். என்னைக் கேட்டால் வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது.

மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விட வினேஷ் போகத்தும் இந்த பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு பெரிய போட்டிக்கு முன்பு இந்த தவறை அவர் செய்திருக்கக் கூடாது. வினேஷ் போகத் எடை அதிகரித்து இருக்கிறது என்று ஏன் யாரும் அவரை எச்சரிக்கை செய்யவில்லை. இதற்கு வினேஷ் போகத் அல்லது அவருடைய பயிற்சியாளர்தான் பதில் சொல்ல வேண்டும். நமக்கு ஒரு பதக்கம் போய்விட்டதே என்ற ஏமாற்றம்தான் எனக்கு அதிகமாக இருக்கிறது" என்று சாய்னா நேவால் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


