Minmini: வெறுப்புப் பேச்சுகளுக்கு தன் இசையால் பதிலடி - மகள் கதீஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்
பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி, ஏலே, லோனர்ஸ் போன்ற திரைப்படங்களின் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், சி.கௌரவ் காளை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மின்மினி. இத்திரைப்படத்தின் மூலமாக ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக இப்படம் தயாரிப்பு பணிகளிலிருந்து வருகிறது. அதற்குக் காரணம் நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்டுவதற்காகத்தான் இந்த காத்திருப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைக்கும் முதல் திரைப்படம் என்பதாலும், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாவதாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
இத்திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நேற்று இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. நேரில் வந்து இப்படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான், தனது மகள் கதீஜா ரஹ்மான் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இதுகுறித்து பேசியிருக்கும் ரஹ்மான், "இந்த மாதிரியான கதையை நான் தமிழில் முதல் முறையாகப் பார்க்கிறேன். இயல்பாகவும், அற்புதமாகவும் கதையைச் சொல்லியிருக்கிறார் ஹலிதா ஷமீம். முதல் திரைப்படத்திலேயே சிறப்பாக இசையமைத்திருக்கிறார் கதீஜா. அப்பா என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே நன்றாக இசையமைத்திருக்கிறார்.

கதீஜா பற்றிய எந்தவொரு செய்தி வந்தாலும் மில்லியன் கணக்கான பேர் அவர்மீது வெறுப்புப் பேச்சுகளை வீசுகிறார்கள். இப்படத்திற்குச் சிறப்பாக இசையமைத்து அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார். கதீஜாவை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அவருக்கு இன்னும் நிறைய வெற்றிகள் குவிய வேண்டும். சமீப காலமாக எல்லா திரைப்படங்களிலும் வன்முறைகள் அதிகமிருப்பதாகத் தமிழ் ரசிகர்கள் மனச்சோர்வு அடைந்திருக்கலாம். அவர்களுக்கெல்லாம் இத்திரைப்படத்தை நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். நிறைய ரசிகர்கள் இப்படத்திற்கு வருவார்கள்" என்று படக்குழுவினரைப் பாராட்டியும், தனது மகள் கதீஜாவைப் பாராட்டியும் பேசியிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


