Ajith Exclusive: அடுத்தடுத்த அப்டேட்கள்; 21 மணி நேர உழைப்பு; K.G.F யுனிவர்ஸ் படம்? - அஜித் மேலாளர்

திரையுலகில் 32-வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் அஜித்குமார். `32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற குறிப்புடன் சாதனை போஸ்டரும் வெளியாகி வைரலானது. அவரது சமீபத்திய படங்களுக்குள் ஒன்றான `விடாமுயற்சி படத்திற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வந்து ரசிகர்களின் ஆதரவை அள்ளி வருகின்றன.
குட் பேட் அக்லியில் அஜித்

இத்தனை வருடத் திரைப் பயணத்தில் அவரிடமும் சில மாற்றங்கள். ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துபவரிடம் இப்போது ஆச்சரியங்கள்! விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் குட் பேட் அக்லிக்கும் கால்ஷீட்களை ஒதுக்குகிறார். அந்தப் படத்தை அவர் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்து அவருக்கு மூளையில் ஆபரேஷன் இருக்கிறது, ஒரு வருடம் ஓய்வில் இருக்கப் போகிறார் என்று ஒரு பக்கம் தகவல்... இன்னொரு பக்கம், இல்லவே இல்லை... அடுத்து அவர் கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்... கே.ஜி.எஃப் படத்தைத் தயாரித்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறது என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து அஜித்தின் நண்பரும், மேலாளருமான சுரேஷ் சந்திராவிடம் கேட்டால், பொறுமையும் புன்னகையுமாக அனைத்து கேள்விகளுக்கும் செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் சொன்ன விளக்கங்கள் இனி...
சுரேஷ் சந்திரா

"விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நடந்ததுல இருந்தே பேச ஆரம்பிக்கறேன். அஜித் சாரை பொறுத்தவரை அவரிடம் ஒரு தயாரிப்பு நிறுவனம் அணுகினால், உடனே சம்மதித்துவிட மாட்டார். ஏன்னா, அவங்களுக்கு முன்னர் அவர் வாக்கு கொடுத்திருக்கும் நிறுவனத்தின் கமிட்மென்ட்களை முடித்துவிட்டே இன்னொரு கம்பெனிக்கு வருவார். லைகா நிறுவனம் சார்கிட்ட பல வருஷமாகவே தொடர்பிலிருந்தாங்க. அதன்பிறகு அவங்களுக்கு ஒரு படம் பண்ணலாம்னு சார் முடிவு பண்ணினார். முதலில் ஒரு இயக்குநர் கமிட் ஆனார். அதன் பிறகு அவங்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து முரண்பாடுகளால வேற டைரக்டர் முடிவானார்.

விடாமுயற்சி

வேற இயக்குநர் முடிவானாலும், அவரும் அஜித் சாருக்கான கதையை ரெடி பண்ணணும். இந்த கால அவகாசத்துல் லைகாவுக்கும் வேற சில கமிட்மெண்ட்கள். கமல் சாரின் இந்தியன் 2, இந்தியன் 3, ரஜினி சாரின் லால் சலாம், வேட்டையன் என நாலு படங்கள் கைவசம் இருந்தன. நமக்கு கதை ரெடியாக வேண்டிய சூழல் இருந்தால லைகா அந்தப் படங்களை உடனடியா தொடங்க வேண்டியதாகிடுச்சு. இதெல்லாம் நமக்குத் தெரியும்.

அப்புறம் அஜர்பைஜான் போன இடத்துல, அந்த லொக்கேஷன்ல வெயில் வர்றதே, சில மணி நேரம்தான். நம்ம ஊர்ல காலையில வெயில் அடித்தால், சாயந்திரம் வரை வெயில் இருக்கும். ஆனா, அங்கே வெறும் நாலு மணி நேரம் மட்டும்தான் வெயில் அடிச்சது. அந்த நேரத்திற்குள் ஷூட் செய்தாகணும். இப்படி நடைமுறை சிக்கல் எல்லாம் இருந்தது. ஆனாலும் அங்கே 70 சதவிகித படப்பிடிப்பை முடிச்சிட்டு வந்தாங்க. அந்த டைம்ல லைகாவுக்கு லால் சலாம், இந்தியன் 2 படங்களோட ரிலீஸ் இருந்ததால, அவங்க ரிலீஸுல கவனம் செலுத்த வேண்டியதாகிடுச்சு. அது நியாயமும் கூட!

விடாமுயற்சியில் அர்ஜுன்
ஆரவ்வுடன் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்

அதன் பிறகு நாம படப்பிடிப்பு கிளம்ப நினைக்கும் போது, கூட நடிக்கறவங்களோட தேதிகள் கிடைக்கல. ஆனால் இதையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல. விடாமுயற்சி கமிட் ஆகும் போது, இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு முடிந்துவிடும், ஒருசில மாத ரிலாக்ஸுக்குப் பின் ஜூன் மாதத்தில் அடுத்த கமிட்மென்ட்டான குட் பேட் அக்லியை முடிச்சிடலாம்னு திட்டமிட்டிருந்தோம். ஆனா, இப்படி தாமதம் ஆனதை கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஆனாலும் இன்னொரு படத்துல நடிக்க ஒப்புக் கொண்டதால, அதோட படப்பிடிப்பையும் உடனே ஆரம்பிக்க வேண்டியதாகிடுச்சு.

கடந்த 5ம் தேதியில் இருந்து அஜித் சார், நாளொன்றுக்கு 21 மணி நேரம் உழைக்கறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் இப்ப ஒரே சமயத்தில் நடந்துக்கிட்டு இருக்கு. அஜித் சாரின் பாலிஸி... ஒரு நேரத்தில் ஒரு கதையில் கவனம் செலுத்தினால்தான் சரியா இருக்கும். இல்லேன்னா குழப்பமாகிடும்னு நினைக்கறவர். ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்குப் போவார். ஆனால், 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் நடித்தாரோ... அப்படி இப்ப கடந்த ஒரு வாரமா நடித்துக் கொடுக்கிறார்.

ரெஜினா

இன்னும் நான்கு நாள்கள் இப்படி ஷூட் போகும். விடாமுயற்சி ஷூட் முடித்து பக்கத்துலேயே இன்னொரு படத்திற்கான படப்பிடிப்புக்குச் செல்கிறார். நள்ளிரவு இரண்டு மணிக்கு ஹோட்டல் செல்லும் அவர், மறுநாள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்குத் திரும்பிவிடுகிறார். இப்படி அவர் உழைக்கக் காரணம், படத்தை முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற கமிட்மென்ட்களால்தான்.

இப்ப அவரது கவனம் முழுவதும் இந்த இரண்டு படங்களை முடித்துக் கொடுப்பதில்தான் இருக்கிறது. இந்தச் சமயத்தில் அவரது மூன்றாவது படத்தைப் பற்றி நினைப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம். ஏன்னா, சூழ்நிலைகளால்தான் அவர் இரண்டு படங்கள் ஒண்ணா பண்ணுறார். இந்தச் சமயத்தில் அவர் மூன்றாவது படம் பண்ண வாய்ப்பே இல்லை. குட் பேட் அக்லியின் ஷூட்டிங் டிசம்பருக்குள் முடிந்துவிடும். இதற்கடுத்து சில மாதங்கள் ரிலாக்ஸ் ஆன பின்னரே, மூன்றாவது படத்திற்கான அறிவிப்பு வரும். அதற்கு அடுத்தாண்டு மே மாதம் கூட ஆகலாம்.

இதற்கிடையே அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியிருக்குது... இன்னொரு ஆபரேஷன் பண்ணப் போறார்னு எல்லாம் செய்திகள் சுத்துது. அதுவும் தவறு. அவருக்கு நடந்தது ஆபரேஷன் இல்லை, புரொசிஜர். அதாவது மைனரான விஷயம். ஆபரேஷன் என்பது மேஜரான விஷயம். அவருக்கு நடந்த விஷயம், ஆஞ்சியோகிராம் பண்றது மாதிரி சின்னதா நடந்ததுதான். முன்னாடி நடிச்ச ஒரு படத்தோட ஷூட்டிங்ல நடந்த ஒரு விஷயம்... இப்ப தொந்தரவு பண்ணினதால இப்படி ஆச்சு. அவருக்கு மூணு வாரம் ஓய்வு கொடுக்கணும்னு சொன்னாங்க. ஆனா, அவர் பத்து நாள்களிலேயே மருத்துவமனையில் இருந்து பைக்கை எடுத்துகிட்டு கிளம்பிட்டார். கூர்க் போயிட்டார். அங்கிருந்து நான் நல்லா இருக்கேன்னு உணர்த்தினார்.

அஜித்
`துணிவு படத்தின் போது ஒரு விஷயம்... அப்ப படத்துல முக்கியமான கேரக்டர்கள்ல நடிக்கும் துணை நடிகர்களையும் நாம புரொமோட் பண்ணணும்னு விரும்பினார். அதனாலதான் அந்தப் படத்தில நடிக்கற ஒவ்வொருத்தர் பத்தியும் ஒவ்வொரு அப்டேட்டா வந்துக்கிட்டே இருந்துச்சு. அதேமாதிரிதான் இப்ப `விடாமுயற்சிலயும் அதைக் கடைப்பிடிக்கறோம். அடுத்து நாளைக்கு ஒரு அப்டேட் வருகிறது. ஆரவ் பத்தின அப்டேட் அது. அதற்கடுத்து படத்தில் நடிக்கும் நிகில், ரெஜினா என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரவிருக்கின்றன.

இன்னொரு விஷயம் அஜித் சார் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை இப்போது அவர் நடித்து வரும் இரண்டு படக்குழுவினருமே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களும் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கு. `32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அது அவரது அனுபவம் என்பதுதான் உண்மை!" என்று நெகிழ்கிறார் சுரேஷ் சந்திரா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.