குழந்தைகளை பாதித்த `மூளை தின்னும் அமீபா தொற்று இளைஞர்களுக்கும் பரவல்... கேரளாவில் அதிர்ச்சி..!
கேரள மாநிலத்தில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தாக்கும் அமீபா தொற்று அவ்வப்போது பரவி வருகிறது. கால்நடைகளை குளிப்பாட்டும் குளங்களிலும், பாசிகள், மாசு கலந்த தண்ணீர் நிறைந்த குளங்களிலும் இவ்வகை அமீபாக்கள் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, வலிப்பு போன்றவை இந்நோய் தொற்றியுள்ளதற்கான அறிகுறிகள்.
மூளையை தின்னும் அமீபா நோய் என அழைக்கப்படும் இந்த தொற்றுக்கு, ஏற்கெனவே 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். வழக்கமாக குழந்தைகளை தாக்கும் இந்த நோய்த்தொற்று திருவனந்தபுரத்தில் இளைஞர்களை தாக்கியிருப்பதும், அதில் ஒருவர் இறந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அமீபா தொற்று பாதித்தவர்களை கண்டறியும் வகையில் மெடிக்கல் போர்டு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் இதுவரை 15 பேருக்கு அமீபா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று பாதித்தால் 98% மரணம் ஏற்படும் அளவுக்கு தீவிரமானது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஏழு பாசிடிவ் கேஸ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒருவர் கடந்த மாதம் 23-ம் தேதி மரணம் அடைந்துள்ளார். மீதமுள்ள 6 பேர் இப்போதும் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு பேருக்கு தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு பேரின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அமீபா தொற்று பாதித்த ஏழு பேரில் ஆறு பேர் ஒரே குளத்தை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 22ம் தேதி, திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டு ஒருவர் அட்மிட் ஆகியிருந்தார். கடந்த 23-ம் தேதி அவர் மரணமடைந்தார். முதல் தொற்று ஏற்பட்டவருக்கு எங்கிருந்து பாதிப்பு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்ததை தொடர்ந்து, மற்றவர்களை அடையாளம் காண முடிந்தது.

மிகவும் அசுத்தமான தண்ணீர், ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் இந்தத் தொற்று ஏற்படுகிறது. குழந்தைகளைத்தான் அதிகமாக இந்த நோய் பாதிக்கிறது. அதே சமயம் இளைஞர்களுக்கு அந்த நோய் ஏற்பட்டது எப்படி என்று சுகாதாரத் துறை பரிசோதனை நடத்தியது. திருவனந்தபுரத்தில் எப்படி நோய்த்தொற்று ஏற்பட்டது என்று பரிசோதனை நடத்தியதில், அனைவரும் ஒரே குளத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அந்தக் குளத்தில் குளித்தவர்கள், தண்ணீரை பயன்படுத்தியவர்கள் என 33 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மெடிக்கல் போர்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொற்று நோய் அல்ல. ஆனால், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கேரளாவில் அதிகமாக இத்தொற்று பதிவாகக் காரணம் என்னவென்று பரிசோதித்துள்ளோம். இது சம்பந்தமாக முதலமைச்சர் தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கூடுதல் தலைமைச் செயலாளர் ஐ.சி.எம்.ஆர்-க்கு கடிதம் எழுதி, இது சம்பந்தமாக ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இந்த நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தி இருக்கிறோம். கால்நடைகளை குளிப்பாட்டும் மற்றும் பாசிகள் மிகுந்துள்ள குளத்தில் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். மூக்கில் ஆபரேஷன் செய்தவர்கள், தலையில் ஆபரேஷன் செய்தவர்கள், தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் இந்த நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம் மாநிலத்தில் அதிகம் பேர் குளத்தில் குளிக்கின்றனர். குளத்தில் குளிப்பவர்கள் காது, மூக்கு, வாய் வழியாகத் தண்ணீர் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலகில் 15 பேர் தான் இந்த நோய் பாதித்து மீண்டு வந்துள்ளனர். கேரளாவில் இரண்டு குழந்தைகள் இந்த நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இப்போது சிகிச்சையில் உள்ள 6 பேரில், 5 பேர் இந்த குளத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். மற்றொருவருக்கு எப்படி பாதித்தது எனத் தெரியவில்லை. நோய்ட்க்தொற்று ஏற்படக் காரணமான அந்தக் குளத்தில் குளிக்க வேண்டாம் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


