வயநாடு நிலச்சரிவு: கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய அரசு பள்ளி மாணவர்கள்!
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர் மீட்பு பணிக்கு உதவிடும் வகையில், ராஜபாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நிதி உதவி அனுப்பியிருப்பது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டின் பெருந்துயராக மாறியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாள்கள் கடந்த நிலையிலும் மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து வருகின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், மீட்பு பணியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்து வரும் அதே வேளையில், யாரேனும் உயிருடன் உள்ளனரா எனக் கண்டறியும் பொருட்டு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாகவும் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேரிடரில், பலர் படுகாயம் அடைந்த நிலையில் நிலச்சரிவுக்குள் சிக்கி மீட்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் துயர் துடைக்கும் பொருட்டும், பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து நிற்பவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில வழிக்கல்வி பயிலும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள், தங்கள் சேமிப்புப் பணத்தை கேரளா பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக அளித்திருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். "தினசரி நாட்டு நடப்புகள், முக்கியச் செய்திகள் தொடர்பாக மாணவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும், ஆலோசனை மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கும் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியிருக்கிறோம். அதில், கடந்த ஐந்து நாள்களாகவே கேரள மாநிலம், வயநாட்டில் நடந்த நிலச்சரிவு தொடர்பான செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டன. இதன் பின்னூட்டமாக, ’கேரள பேரிடர் மீட்புப் பணிக்கு நம்மால் முடிந்த நிதி உதவி செய்யலாமா?’ என மாணவி ஒருவர் யோசனையை முன்வைத்தார். இதற்கு, மற்ற மாணவ, மாணவிகளும் சம்மதம் தெரிவித்தனர்.
உடனடியாக, நிதி திரட்டலில் ஈடுபட்ட மாணவர்கள், அவரவர் சேமிப்புப் பணத்திலிருந்து தங்களால் முடிந்தளவு பணம் எடுத்துவந்தனர். இப்படியாக மொத்தம் 13,300 ரூபாய் சேர்ந்தது. தொடர்ந்து, வகுப்பாசிரியர் மூலமாக, அந்த நிதியை கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புவதென முடிவு செய்தோம். அதன் தொடர்ச்சியாக, டி.வி.களில் ஒளிபரப்பப்பட்ட கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வங்கிக் கணக்கு விவரங்களை குறிப்பெடுத்தோம். இந்த விவரங்களை, வங்கியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் மூலமாக உறுதிப்படுத்திக்கொண்டு பணத்தை கேரள மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதி கணக்கில் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டோம்.

கேரள மாநிலத்தில் மக்கள்படும் துன்பங்கள், துயரங்களை செய்தி, தொலைக்காட்சியின் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிலச்சரிவு அதிர்ச்சியிலிருந்தும், இடர்பாடுகளில் இருந்தும் மக்களை மீட்டெடுத்து மறுகுடியமர்வு செய்வதற்கு அரசும், ராணுவமும் களத்தில் கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகிறது. அந்த முயற்சிக்கு பக்கபலமாக எங்களின் சிறு பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, அனைவரிடத்திலும் நிதி திரட்டி, அதை சேர்த்து நிவாரணநிதி அனுப்பியிருக்கிறோம்" என்றனர்.
நாளைய இந்தியா, இன்றே சமூகப் பொறுப்பெடுக்க ஆரம்பித்துவிட்டனர்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


