“மனதிற்கினிய மெரினா; காஞ்சியின் தெருக்கூத்து; துரத்திய வறுமை” - பகிரும் புகைப்படக் கலைஞர் ஜிப்ஸி!
திருநெல்வேலியைச் சேர்ந்த சிவசங்கர்,சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார்.
வார நாட்களில் சாமானியனாக இருப்பவர். வார இறுதி நாட்களில் ஜிப்ஸியாக மாறிவிடுகிறார். எல்லாரும் வீட்டில் ஓய்வெடுக்கும் வார இறுதி நாட்களில் இவர் மட்டும் கேமராவுடன் ரயில் ஏறுகிறார். தெருக்கூத்து தொடங்கி குலசை தசரா திருவிழா, அரளிப்பாறை மஞ்சுவிரட்டு, நாட்டார் தெய்வங்கள் எனப் பல பண்பாட்டு அசைவுகளை இவரது கேமரா ஆவணப்படுத்தியுள்ளது. இவ்வளவையும் செய்த கேமராவை குடும்பச் சூழலின் காரணமாக விற்றுவிட்டு, தற்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் ஜிப்ஸி.
இதுதொடர்பாக அவரை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, தன் ஃபோட்டோகிராபி பயணத்தைப் பற்றி மனம் திறக்கிறார். அப்போது பேசியவர், “2018 இல் கல்லூரி முடித்த நேரத்தில்தான் ஃபோட்டோஸ் எடுக்க ஆரம்பித்தேன். எனக்கு நிறைய ஊர் சுத்தப் பிடிக்கும். ஊர் சுற்றும்போது அதை மெமரியாக்க, போட்டோ எடுப்போம் இல்லையா? அப்படித்தான் முதன்முதலில் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். ஃப்ரண்ட்ஸ் எல்லாரும், ‘நல்லா எடுக்குறடா நிறையா எடு’ன்னு சொன்னார்கள். அப்போது ‘நாமும் நல்லாதான் எடுக்கிறோம்’ என்று எனக்கு ஒரு எண்ணம் வந்தது. முதலில் நண்பர்களைத்தான் எடுக்க ஆரம்பித்தேன்.
அதன்பிறகு என்னைச் சுற்றி இருக்கிற இடங்களையும், மனிதர்களையும் எடுக்க ஆரம்பித்தேன். தொடக்கத்தில் எல்லாத்தையும் ஃபோனில் தான் எடுத்துவிட்டு இருந்தேன். எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணேன். அதன் மூலமா இந்த ஃபீல்டில் இருக்கும் நிறையப் பேரின் அறிமுகம் கிடைத்தது. அதில் ஒருவர் என்னுடைய ஃபோட்டோஸ்களைப் பார்த்துவிட்டு எனக்கு அழைத்தார். அழைத்தவர், ‘நீங்க போட்டோ ரொம்ப நல்லா எடுக்குறீங்க. என்னுடைய கேமரா ஒன்று சென்னையில் நண்பர் வீட்டில் இருக்கிறது. நான் அவரிடம் சொல்கிறேன். நீங்கப் போய் வாங்கிக்கோங்க. அந்த கேமராவ மூன்று மாசம் வைச்சுக்கோங்க. அதை வைத்து கேமராவ பழகிக்கோங்க’ என்றார். இதுநாள் வரைக்கும் நான் அவரை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது.
பிறகு அதை வைத்துத்தான் கேமராவில் ஃபோட்டோ எடுக்க பழகினேன். அலுவலகம் போகும்போது கேமராவையும் கூட எடுத்துக்கொண்டு போய்விடுவேன். திரும்ப வீட்டுக்கு வரும்போது எங்கேயாவது இறங்கிப் போட்டோ எடுக்க ஆரம்பித்துவிடுவேன். இப்படிதான் தொடக்கத்தில் போய்க் கொண்டிருந்தது. முதலில் எனக்கு இருந்த ஆர்வத்தில் நிறைய ஃபோட்டோஸ்களை எடுத்துத் தள்ளினேன். மூன்று மாசத்துக்குப் பிறகு, நான் அவர்கிட்டயே கேமராவைத் திருப்பிக் கொடுத்துட்டேன். ஆனால், அதன்பிறகு என்னால் ஃபோனில் போட்டோ எடுக்க முடியவில்லை. கேமராவில் எடுத்தெடுத்து பழகிப் போனதால், போனில் எடுக்கக் கஷ்டமாக இருந்தது. இது சரிப்பட்டு வராது என்று எண்ணி, நான் வேலை பார்த்துச் சேர்த்து வைத்த பி.எஃப் பணம், வீட்டிலிருந்து கிடைத்த பணம், நண்பர் ஒருவர் கொடுத்த பணம் என எல்லாத்தையும் சேர்த்து வைத்து 2020ல் 55,000 ரூபாய்க்கு ஒரு கேமரா வாங்கினேன்.
நான் கேமரா வாங்கிய நேரம் கொரோனா காலம். வெளியில் எங்கேயும் பயணிக்க முடியல. என்னைச் சுற்றி இருந்ததை மட்டும்தான் போட்டோ எடுத்தேன். லாக்டவுனை கொஞ்சம் தளர்த்தவும் நிறைய இடங்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தேன்.
எனக்கு பேக்-அப், குடும்ப வருமானம் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனால் வெளியூருக்குச் சென்று பெரும்பாலும் தங்குறதில்லை. வார இறுதி நாட்களில் கிடைக்கும் விடுமுறைகளில் ஒரு நாளை குடும்பத்திற்குக் கொடுத்துடுவேன். இன்னொரு நாள் எனக்கானது. என்னோட பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான் இருக்கும். அதனால் எங்கும் தங்க வேண்டியிருக்காது. தங்குவதற்கான செலவும் இருக்காது. போக்குவரத்து செலவு மட்டும் தான். அந்த நாட்களில் உணவும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒரு பன் பாக்கெட் மட்டும்தான். அதனால், கையில் 500- 1000 இருந்தால் போதும் தமிழ்நாட்டின் எந்த ஊருக்கும் தைரியமாக ரயில் ஏறி கிளம்பிவிடுவேன். அப்படித்தான் நான் நிறைய விஷயங்களை டாக்குமென்ட் செய்தேன்.
நான் அதிகம் விரும்பக் கூடிய, என்னை எப்போதும் ஏமாற்றாத ஒரு இடம் என்றால் அது மெரீனா தான். அது என் வீட்டில் இருந்து ரொம்ப பக்கம். எத்தனை முறை சென்றாலும் அங்கு ஒரு போட்டோவாவது ஆத்மார்த்தமாகக் கிடைத்துவிடும். அதனாலேயே மெரீனா மனசுக்கு ரொம்ப க்ளோஸ்.
எதார்த்தமாகத் தெருக்கூத்து போஸ்டர் ஒன்றைப் பார்த்து நானும், என் நண்பர் ஒருவரும் தெருக்கூத்தை டாக்குமென்ட் செய்ய, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு ஊருக்குப் புறப்பட்டோம். காஞ்சிபுரத்திலிருந்து அந்த ஊருக்குப் போகவேண்டிய லோக்கல் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். அந்த ஊரில் இருந்து வந்து வேலை செய்யும் மக்கள் எங்களுடைய உடை மற்றும் பைகளைப் பார்த்து எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். போட்டோ எடுப்பதற்காக வந்திருக்கிறோம் என்று சொன்னதும் ‘போட்டோ எடுக்குறதுக்கா இவ்வளவு தூரம் வந்திங்க?’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் ‘இந்த ஊர் வேணாம், இன்னொரு ஊர்ல தெருக்கூத்து நடக்குது. அங்க இன்னும் நல்லாயிருக்கும்’ என்று காஞ்சிபுரத்தில் வெம்பாக்கம் என்ற ஊருக்கு வழிக்காட்டினார்கள். அங்குதான் முதன் முதலில் நான் தெருக்கூத்தை டாக்குமென்ட் செய்தேன்.
அதன் பிறகு நிறைய தெருக்கூத்துக்கு போயிருக்கேன். பதினாறாம் நாள் காரியம் பண்ணும்போது ஒரு தெருக்கூத்து போடுவாங்க. அதெல்லாம் டாக்குமென்ட் பண்ணிருக்கேன். அதேமாதிரி குலசை. குலசைக்கு நான் முதல் தடவை மட்டும்தான் முட்டிமோதி போனேன். அடுத்தடுத்த முறை அதுக்கான சூழல் தானா அமைஞ்சது. எதோ ஒரு விஷயம் என்னை அங்க கூட்டிட்டுப் போய்டுது. என்னைப் பொறுத்தவரை போக வேண்டிய இடம் முக்கியமில்லை. பயணம்தான் முக்கியம். பயணத்தை ஆரம்பித்துவிட்டால், அது நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கூட்டிக் கொண்டு போய்விடும்.
நடுவில் எனக்கு வேலையில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என்று ரொம்ப நெருக்கடியானது. எனக்கு மகள் வேறு இருக்கிறாள். அவளை வேற பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி நிறைய நெருக்கடிகள் வந்ததால், என்னுடைய கேமராவை விற்க வேண்டியதாகிடுச்சு. இப்போ ஒரு ஏழெட்டு மாதங்களாகப் பயணம் ஏதும் போக முடியாமல் இருக்கேன். இது என்னைக் கட்டிப்போட்டு உட்கார வைத்த மாதிரி இருக்கு.








இதில் இருந்து மீளனும் என்று நினைக்கிறேன். அதற்காக தான் என்னுடைய நல்ல ஃபோட்டோஸ்களை ஒரு நல்ல தரத்தில் பிரிண்ட் செய்து விற்கலாம் என்று முடிவு செய்தேன். அதை பேஸ்புக்கில் ஒரு பதிவாகப் போட்டேன். என்னுடைய பதிவைப் படித்துவிட்டு, நான் தொடர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகவே நிறைய பேர் என்னோட போட்டோ பிரிண்ட்ஸை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் சிங்கப்பூரில் இருந்து ஒருத்தர் என்னுடையப் பதிவைப் பார்த்துவிட்டு எனக்கு அழைத்து, ‘என்னாச்சு?, எதனால கேமராவ வித்தீங்க? என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன்.
பிறகு, ‘எவ்வளவுக்கு வித்தீங்க?’ என்று கேட்டார். நான் கேமரா விற்றத் தொகையை சொன்னேன். தீடீர்னு எனக்கு அந்தத் தொகையை அனுப்பி வைச்சிருக்கார். அதற்கு முன்பு வரை அவர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. இப்படி நிறைய மனிதர்கள் எனக்கு உதவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம ஒரு விஷயத்துக்கு உண்மையா இருந்தா, இந்த பிரபஞ்சம் நமக்கு வளைஞ்சு கொடுக்கும் என்று நம்புகிறேன். சீக்கிரமே மீண்டும் ஒரு கேமரா வாங்குவேன்” என்கிறார் நம்பிக்கைத் துளிர்க்க...
மீண்டும் நீங்கள் கேமராவும் கையுமாக ரயில் ஏற வாழ்த்துகள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


