Wayanad: ``கிளி பேச்சை கேட்டதால் உயிருடன் இருக்கிறோம் வயநாடு நிலச்சரிவில் தப்பிய வினோத் உருக்கம்!

பொதுவாகவே இயற்கை பேரிடர்கள் வரும்போது மனிதர்களைவிட மற்ற உயிரினங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்கின்றன. பறவைகள், எறும்புகள் கூட பெரும் மழைக் காலங்களில் தங்களை காத்துக் கொள்கின்றன.

சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நடந்தபோது விலங்கினங்கள் சில சமிக்ஞைகளை வெளிப்படுத்தின என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள். இது சம்பந்தமான செய்திகள் பத்திரிகைகளிலும் வெளியாயின.

நாய்

கிராமங்களில் வாழும் வயதானவர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய், பசு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள், அந்த குடும்பத்திற்கு இடர்பாடு வரும் முன்னர் எப்படி நடந்து கொண்டன என்பதை கூறியுள்ளனர். இது பற்றி நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக, மனிதனை தவிர பிற உயிரினங்களுக்கு வரப்போகும் இயற்கை பேரிடர்கள் பற்றி நன்கு உணர்கின்றன. மனிதர்களாலும் அறிய முடியும். ஆனால், மனிதர்களுடைய வாழ்வியல் முறைகள் மாறிப்போனதாலும், இயற்கையை விட்டு விலகி போனதாலும், நமக்கு இது போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை.

ஆனால், வனத்திற்குள் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடி மக்கள் வனவிலங்குகள், வன உயிரினங்களுடன் சேர்ந்து பழகி வாழ்கின்றனர். இதனால் வனவிலங்குகள், வன உயிரினங்கள் எப்போது எந்த வடிவில், என்ன தகவல் சொல்லும் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். இதனால் வன விலங்குகள், பறவைகள் கொடுக்கும் தகவல்களை, சொல்லும் செய்திகளை அவர்கள் கேட்டு நடந்து கொள்கிறார்கள். இந்த அணுகுமுறை வனப்பகுதியில் வாழ்பவர்களை பல பேரிடர்களிலிருந்து பாதுகாத்து வருகிறது.

வயநாட்டில் மழை வெள்ளம், நிலச்சரிவு பேரழிவு நடந்திருப்பது அனைவருக்கும் தெரியும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது பேரிடர் வரப்போகிறது. அதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள் என ஒரு கிளி தங்களது எஜமானியின் குடும்பத்தையும், அவர்களுக்கு அருகில் வசித்த பல குடும்பங்களையும் எச்சரித்து பாதுகாத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு பேரிடர் - Wayanad Landslide

அதாவது, இயற்கையின் ரகசியங்களை பறவைகளும் விலங்குகளும் அறிந்துகொள்ளும் திறன்பெற்றிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வயநாடு மாவட்டம், சூரல்மலா என்ற கிராமத்தில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் கின்கினி என்ற பெயர் கொண்ட கிளி வளர்த்து வந்திருக்கிறார். இந்த கின்கினி என்ற கிளிக்கு வரப்போகும் நிலச்சரிவு குறித்து தெரிந்திருக்கிறது. அந்த கிளி நொடிப்பொழுதும் தாமதிக்காமல், விநோதமான முறையில் சத்தத்தை எழுப்பி எச்சரிக்கை கொடுத்துள்ளது. கிளியின் திடீர் எச்சரிக்கையை புரிந்து கொண்டு துரிதமாக செயல்பட்ட வினோத், தன்னுடைய குடும்பம் மட்டுமல்லாமல், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் என 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் வெளியேறிய பின்னர், அப்பகுதி முழுமையாக நிலச்சரிவில் சிக்கி நிலத்திற்குள் புதைந்துள்ளது.

பல குடும்பங்களை காப்பாற்றிய வினோத்தின் வளர்ப்பு கிளி

அந்த கிளி மட்டும் சரியான நேரத்திற்கு எச்சரித்து இருக்காவிட்டால், அவர்கள் அத்தனை பேரும் மண்ணில் புதைந்திருப்பார்கள். இது பற்றி தகவல் தெரிவித்த வினோத், "கிளி மட்டும் சரியான நேரத்தில் எங்களை எச்சரிக்காவிட்டால், எங்கள் குடும்பமும், மேலும் பலரும் மண்ணுக்குள் புதைந்திருப்போம். கிளி பேச்சை கேட்டதால்தான் உயிருடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் கேரளாவை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த செய்தி குறித்து தகவல் அறிந்த பலரும், இயற்கையையும், அதை உணரும் விலங்குகள், பறவைகளின் அருமையினையும் புரிந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இனியாவது விலங்குகள், உயிரினங்கள், பறவைகள் மீது அக்கறை காட்டுங்கள். அன்பு செலுத்துங்கள். உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துகள் வலைதளங்களில் வலம் வருகின்றன.

- மா.பாண்டியராஜ்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.