Vinesh Phogat: `ஜந்தர் மந்தரில் சிந்திய கண்ணீரின் வெற்றி!- அநீதிகளுக்கு பதிலடி கொடுத்த வினேஷ் போகத்

நடுவர் வெற்றியைக் குறிக்கும் வகையில் வினேஷ் போகத்தின் கையை உயர்த்திப் பிடிக்கும் காட்சி, முற்கம்பியால் கட்டப்பட்டிருந்த ஒரு தேவதையின் சிறகை அவிழ்த்துவிட்டதைப் போல தெரிகிறது. பாரிஸின் மல்யுத்தக் களத்தில் புஜங்கள் உயர்த்தி நிற்கிறார் வினேஷ் போகத். இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முதல் வீராங்கனை இவர்தான்.

எங்களை கொன்றுவிட வேண்டுமென்றால் கொன்றுவிடுங்கள். நாங்கள் குற்றவாளிகள் அல்லர். இந்த நாட்டுக்காக பதக்கங்களை வென்று கொடுத்தது இதற்காகத்தானா? ஜந்தர் மந்தரில் தங்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு எதிராக வினேஷ் போகத் கண்ணீர் சிந்தி போராடிக் கொண்டிருந்த போது பேசியது இது.

பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு எதிராக மல்யுத்தக் கூட்டமைப்பிற்கு எதிராகவும் கடந்த ஆண்டு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அதில் முன் நின்றது வினேஷ் போகத்தான். பாலியல் குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்த பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பல மாதங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியிருந்தது. எங்கேயுமே தங்களின் குரல் கேட்கவில்லை, எங்குமே தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்கிற சூழலில் வேறு வழியே இல்லாமல்தான் இவர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆனால், அந்தப் போராட்டத்தைக் கூட அவர்களால் நிம்மதியாக முன்னெடுக்க முடியவில்லை.

குற்றத்தைச் சுமந்து நின்ற பிரிஜ் பூஷண் என்னவோ உத்தமர் போல வீராங்கனைகளுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருந்தார், ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளி என்பதால் ஐடி விங் தரப்பிலும் வீராங்கனைகளுக்கு எதிராக ஒரு வெறிநாய் கூட்டமே பொய் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தது. காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். இந்தியாவுக்காக உலக அரங்கில் சாதித்தவர்கள் என்பதற்காகக் கூட கொஞ்சமேனும் கருணையையும் கண்ணியத்தையும் அவர்களிடத்தில் காட்டியிருக்கலாம். ஆனால், அதிகாரவர்க்கம் அதற்கெல்லாம் தயாராக இல்லை. சாக்ஸி மாலிக் தனது காலணிகளைத் தூக்கி எறிந்து மல்யுத்தத்தில் இருந்தே ஓய்வுபெறப்போவதாக கூறினார். வினேஷ் அரசு கொடுத்த விருதுகளையெல்லாம் திருப்பியளிக்கப்போவதாகக் கூறினார்.

அடக்குமுறைகளால் மனம் வெதும்பிப் போய் ஆவேசத்தில் தான் வென்ற பதக்கத்தை ஓகியோ நதிக்கரையில் வீசியெறிந்தார் முகமது அலி. மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதிக்கரையில் நின்று பதக்கங்களை மட்டும்தான் வீசி எறியவில்லை. மற்றப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டார்கள். ஒரு எல்லைக்குமேல் வேறு வழியின்று எதோ அரைகுறையாக அரசாங்கம் காது கொடுத்து கேட்டு எதையோ செய்து கொடுத்தது. இப்படியொரு சூழலில்தான் ஒலிம்பிக்ஸ் களத்திற்குள் வந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக்ஸ் களம் ஒன்றும் அவருக்கு புதிதல்ல.

ஏற்கனவே இரண்டு முறை ஆடியிருக்கிறார். 2016 இல் ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் அத்தனை வாய்ப்போடும் சென்றிருந்தார். காலிறுதி வரைக்கும் முன்னேறியிருந்தார், சிறப்பாக ஆடியிருந்தார். ஆனால், அங்கே துரதிஷ்டவசமாக சீன வீராங்கனை சூன் யானுக்கு எதிராக ஆடிக்கொண்டிருந்த போது முட்டி மடங்கி களத்திலேயே துடிதுடிக்க சரிந்தார்.

தேசத்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற பெரும் கனவோடு சென்ற வினேஷ் வீல் சேரில் இந்தியா வந்து சேர்ந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வினேஷூக்கும் அசோசியேஷனுக்கும் இடையே எக்கச்சக்க கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் இருந்தன. இந்த மோதல்களே அவரின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

இப்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸ். முன்னெப்போதையும்விட வினேஷ் பதக்கம் வெல்ல வேண்டியதற்கான காரணம் இப்போது வலுவாக இருந்தது. அதற்கேற்ப கடினமான சவாலும் இருந்தது. மல்யுத்தத்தின் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் அவர் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே ஜப்பான் வீராங்கனை சுசாகியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சுசாகி நம்பர் 1 வீராங்கனை.

பல வருடமாகத் தோல்வியையே பார்த்திடாதவர். ஜப்பானியர்கள் தவிர்த்து வெளிநாட்டு வீராங்கனைகள் யாரும் அவரை வீழ்த்தியதில்லை. இப்படியாக அந்த வீராங்கனை சார்ந்து வெளியான தகவல்களெல்லாம் மிரட்சியை மட்டுமே கொடுத்தன. வினேஷ் இந்தப் போட்டியை வெல்ல வாய்ப்பே இல்லை. இந்தப் போட்டியில் தோற்று ரெப்பிசேஜ் ரவுண்ட் மூலமாக வெண்கலப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பைப் பற்றி அவர் யோசிக்கலாம் என்பதே பலருடைய அபிப்ராயமாகவும் இருந்தது. ஆனால், வினேஷ் இப்போது மல்யுத்தம் பயின்ற வீராங்கனை மட்டும் இல்லையே. அவர் வீதியில் இறங்கி போராடி அந்த போராட்டத்தின் வழி ஒரு நெஞ்சுரத்தை பெற்றிருக்கிறார். மேலும், இங்கிருக்கும் எதிராளிகளை விட தன் சொந்த நாட்டில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் சில மிருகங்களுக்கு அடி கொடுக்க வேண்டும்.

ஜப்பான் வீராங்கனை மேலும் ஒரு வெற்றிக்காக மேலும் ஒரு பதக்கத்திற்காக ஆடினார். ஆனால், வினேஷ் தன்னுடைய வருங்கால சந்ததிக்களுக்காக ஆடினார். இந்த எண்ணம்தான் ஒரு மாய சக்தியை வினேஷுக்கு கொடுத்தது. சுசாகிக்கு எதிராக முதல் இரண்டு புள்ளிகளை இழந்தபோதும் விடாமல் போராடி கடைசி நொடிகளில் அற்புதம் நிகழ்த்தி 3-2 என போட்டியை வென்றார். வெல்லவே முடியாதென கூறிய வீராங்கனையையே வென்றுவிட்டதால் அடுத்தடுத்த சவால்களையும் வெற்றிகரமாக கடந்தார் வினேஷ். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஒக்சனாவுக்கு எதிராக 7-5 என வென்றார். அரையிறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தையும் உறுதி செய்துவிட்டார்.

விளையாட்டும் ஒரு அரசியல்தான். ஒலிம்பிக்ஸ் உலகமே உற்றுநோக்கும் ஒரு அரசியல்களம்தான். இங்கே பல சமயங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் வெற்றியின் வழி தங்களின் குரலை வலுவாக முன்னெடுத்து வைத்திருக்கின்றனர். இப்போது வினேஷ் போகத்தும் அதைத்தான் செய்திருக்கிறார். அவர் தன் சக வீராங்கனைகளைத் தோற்கடிக்கவில்லை. அவர் குரல்வளையை நெறிக்கும் அதிகார வெறியை மல்லுக்கட்டி தோற்கடிக்கச் செய்திருக்கிறார். இறுதிப்போட்டியில் வினேஷ் வெல்லப்போகும் பதக்கம் வரலாற்றில் என்றைக்குமே போராட்டத்தின் சான்றாக நிலைத்து நிற்கும். வாழ்த்துகள் வினேஷ்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.