Vinesh Phogat: `சாம்பியன்ஸ் களத்திலிருந்து தங்கள் பதிலை அளிப்பார்கள்..!- வினேஷுக்கு ராகுல் வாழ்த்து

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமாக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின்போது வீனேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் உலக அரங்கில் கவனிக்கப்பட்டது.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

விரக்தியின் உச்சத்தில் மத்திய அரசு தனக்கு வழங்கிய கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்தார். இந்த நிலையில், கடந்தாண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் எடையை குறைத்து நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். அதில், பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத்.

ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விக்னேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``இன்று ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை வீழ்த்தி வினேஷுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சிவசப்பட்டது. வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் குறிக்கோளையும், திறன்களையும்கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.

ராகுல் காந்தி - மோடி

இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று வீர மகளின் முன் சரிந்தது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.