காவிரி: ``கிளை ஆறுகள்லயும் தண்ணீர் வந்துடுச்சு; பசுமை விகடன் எடுத்த முயற்சிக்கு நன்றி!

கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட வெள்ளநீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் ஜூலை 30-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மறுநாளே கல்லணையை வந்தடைந்த நிலையில் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் மிகவும் குறைவான அளவும், வெள்ள வடிகால் ஆறான கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீரும் திறக்கப்பட்டது.

காவிரி, வெண்ணாறு ஆகியவற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படததால் விவசாயிகள் மிகுந்த கொதிப்படைந்தனர். மேட்டூர் அணையின் உபரி நீரை கொள்ளிடத்தின் வழியாக கடலில் கலப்பதற்குப் பதிலாக காவிரியாற்றின் கிளை ஆறுகளில் திறந்துவிட்டு ஏரி, குளங்களை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என டெல்டா விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

மண்ணியாறு

இதுகுறித்தான செய்தியை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விகடன் இணையதளத்தில் கொள்ளிடத்தில் லட்சம் கனஅடி தண்ணீர்... காவிரியில் விவசாயிகளின் கண்ணீர்... தி.மு.கவின் விவசாய பலி! என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து 4-ம் தேதி விவசாயிகள் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். அது வைரலானது. இந்த விஷயம் விவசாயிகள் மற்றும் ஆட்சியாளர்கள் வட்டாரத்தில் பேசுப்பொருளானது. இதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் அறிக்கையும் வெளியிட்டார்கள். இதன் விளைவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிளை ஆறுகள் பலவற்றில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள புதுக்குடியைச் சேர்ந்த விவசாயி கண்ணன், "மேட்டூர் அணையில் முழு கொள்ளளவை எட்டியதும் தண்ணீர் திறக்கப்பட்டுச்சு. அந்த தண்ணீர் எங்க ஊர் அரசலாத்துக்கு வரல. கொள்ளிடம் ஆத்துல திறந்து விட்டு உபரிநீரை வீணடிக்காமல், அரசலாறு உள்ளிட்ட கிளை ஆறுகள்ல திறந்துவிட்டால் பல விதங்கள்லயும் விவசாயிகள் பயன் அடைவோம்னு எங்களோட ஆதங்கத்தை பசுமை விகடன் வீடியோ மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.

கண்ணன்

அந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல அதிகமா பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியதால, மறுநாளே எங்க ஊர் அரசலாத்துல தண்ணி திறந்துட்டாங்க. இதனால் அடிபம்புகள்ல தண்ணீர் வர ஆரம்பிச்சிடுச்சு. போர்வெல்கள்லயும் நீர்மட்டம் உயர்ந்திருக்கு. பசுமை விகடன் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிச்சிக்குறோம்" என தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள புள்ளபூதங்குடியைச் சேர்ந்த விவசாயி அய்யப்பன், "எங்க பகுதியில அமைஞ்சிக்குற மண்ணியாறு திறந்தால் பயனுள்ளதா இருக்கும்னு பசுமை விகடன் மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.

அய்யப்பன்

அதோட விளைவால் மண்ணியாத்துல நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்தாங்க. வறண்டு கிடந்த ஆத்துல தண்ணி போறதே பாக்குறதுக்கே மகிழ்ச்சியா இருக்கு" என தெரிவித்தார்.

இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டபோதே காவிரி கிளையாறுகளிலும் தண்ணீர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்துவிட்டார்கள். உபரி நீரை திறந்துவிடும்போதே கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டிருந்தால் இன்னும் பயனடைந்திருப்போம் என்று ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.