தேர்தல் தோல்வி எதிரொலி: தமிழ்நாட்டு விவசாயிகளை பழிவாங்கும் மத்திய பா.ஜ.க அரசு!

மத்திய அரசின் நாபெட் (NAFED) நிறுவனம் தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கொப்பரை தேங்காய்களுக்கு 3 மாதங்களாக பணம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ள ரூ.150 கோடியை உடனடியாக வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, "20 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்த ஒரு தேங்காயின் விலை, தற்போது 10 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் தென்னை விவசாயம் தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகிறது.

கொப்பரை

தென்னை விவசாயத்துக்கு இருக்கும் ஒரே ஆதரவு மத்திய அரசு கொள்முதல் செய்யக்கூடிய கொப்பரை தேங்காய்தான். இதற்கு சட்டப்பூர்வமான விலை இருப்பதால் 1 கிலோ கொப்பரை தேங்காய்க்கு 111. 60 காசு கிடைத்து வருகிறது. இதுவும் கட்டுப்படியான விலை என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும் தேங்காய் விற்பனைக்கு ஒரு ஆதரவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் நாபெட் நிறுவனம்  கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் 18,000 விவசாயிகளிடமிருந்து 150 கோடி ரூபாய்க்கு கொப்பரைகளை கொள்முதல் செய்தது.

ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. விலை ஆதரவு திட்டத்தின் (Price Support Scheme) கீழ் கொள்முதல் செய்ததிலிருந்து 3 நாள்களுக்குள் பணம் தர வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக பணம் தராமல் இழுத்தடித்து வருகிறது நாபெட். வழக்கமாக கொப்பரை விற்ற 15 நாள்களுக்குள் பணம் கிடைத்துவிடும். தற்போது 1 கிலோ கொப்பரைக்கு 111 ரூபாய் வழங்கும் தொகையை 150 ரூபாயாக உயர்த்தி கொடுக்க கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசே கொப்பரையை எண்ணெய் ஆக்கி பாரத் கோகனட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்யவும் தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.

தென்னை மரங்கள்

நிலுவைத்தொகை இழுத்தடிப்புக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே நினைக்கிறோம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஓர் இடத்தில் கூட பா.ஜ.கவால் வெல்ல முடியவில்லை. தேர்தலில் தோற்றுவிட்டதால் தமிழ்நாட்டுக்கு செய்வதால் என்ன பயன்? என்று மத்திய பா.ஜ.க அரசு நம்புகிறது. இதற்காக விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. நாபெட் அதிகாரிகளை கேட்டால் சில விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறோம். மீதி தொகை விரைவில் வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு பணம் கொடுத்துவிட்டது. தமிழகத்துக்கு மட்டும் ஏன் பணம் கொடுக்கவில்லை? என்பதே எங்கள் கேள்வி.

ஈசன் முருகசாமி

இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பணத்தை வழங்காவிட்டால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அனைத்து தென்னை விவசாயிகளையும் திரட்டி கோரிக்கை நிறைவேறும் வரை சென்னை, எழும்பூரில் உள்ள நாபெட் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இது சம்பந்தமாக விளக்கம் கேட்க சென்னையில் உள்ள நாபெட் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். அந்த தொலைபேசி எண்கள் 044-29555793, 26431388 ஸ்விட்ச் ஆப்பில் உள்ளன. மின்னஞ்சலிலும் தகவல் அனுப்பியுள்ளோம். நாபெட் சார்பில் அளிக்கும் விளக்கத்தை வெளியிட தயாராக இருக்கிறோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.