ரூ.100 கோடி; ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் மக்கள் இழந்த பணத்தை மீட்ட மும்பை Cyber Crime போலீஸ்!
நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில் இணைய தள குற்றத்திற்கு பஞ்சமில்லை. மர்ம நபர்கள் போன் செய்து சி.பி.ஐ அதிகாரி, அமலாக்கப் பிரிவு அதிகாரி என்று சொல்லி மிரட்டினால், உடனே விசாரணைக்கு பயந்து பொதுமக்கள் பணத்தை கொடுத்துவிடுகின்றனர். நன்கு படித்து வேலையில் இருப்பவர்கள்கூட இது போன்ற மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். அது போன்ற ஆன்லைன் மற்றும் இணையதள மோசடியில் பணத்தை இழக்கும் நபர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் சைபர் பிரிவு 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தவுடன் சைபர் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தால் உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட பணம் வேறு கணக்கிற்கு செல்ல விடாமல் தடுத்துவிடுவர்.
இதற்காக 1930 என்ற ஹெல்ப்லைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சைபர் பிரிவு போலீஸார் இந்த ஆண்டில் கடந்த 7 மாதங்களில் பொதுமக்கள் இணையதள குற்றவாளிகளிடம் இழந்த 100 கோடியை மீட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 35,918 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததாக புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மும்பை சைபர் பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு 100 கோடியை மீட்டெடுத்துள்ளனர். இது குறித்து துணை கமிஷனர் நத்தா நலவாடே அளித்த பேட்டியில், ``பாதிக்கப்பட்டவர் 1930 நம்பருக்கு போன் செய்து பண பரிவர்த்தனை குறித்த தகவல்களை தெரிவித்தால், உடனே நாங்கள் தகவல்களை குறித்துக்கொண்டு வங்கி அதிகாரிகளின் துணையோடு மோசடி செய்யப்பட்ட பணம் வேறு ஒரு இடத்திற்கு செல்லாமல் முடக்கி விடுகிறோம் என்றார். கடந்த ஆண்டு சைபர் க்ரைமில் மோசடி செய்யப்பட்ட 26.5 கோடி பணம் மீட்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் இந்த சைபர் பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்படுகிறது. இதில் 3 அதிகாரிகள் மற்றும் 50 போலீஸார் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


