கடலூர்: கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கைதி; 3 போலீஸாரை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி... என்ன நடந்தது?

கடலூர், திருவந்திபுரத்தில் இருக்கும் ஒரு திருமண நிலையத்தில், கடந்த 24-ம் தேதி மாலை ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது கஞ்சா போதையுடன், கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் அந்த நிகழ்ச்சிக்குள் புகுந்த இரண்டு இளைஞர்கள், அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசைக்கு நடனமாடினார்கள். அத்துடன் வீச்சரிவாளைக் காட்டி மிரட்டியதால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். தொடர்ந்து அங்கிருந்த இருக்கைகளை அரிவாள்களால் சேதப்படுத்திய அந்த இளைஞர்கள், அங்கிருந்து வெளியேறி தங்கள் இரு சக்கர வாகனத்தில் கடலூரை நோக்கிச் சென்றார்கள். அப்போதும் வீச்சரிவாளை சுழற்றி  பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டே சென்றார்கள்.

மனைவி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கைதி சூர்யா

அப்போது அவர்கள் சுழற்றிய வீச்சரிவாள், அந்த வழியாக சென்று கொண்டிருந்த பிரகாஷ் என்பவரின் முகத்தில் வெட்டியது. அதில் பிரகாஷின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய திருப்பாதிரிப்புலியூர் போலீஸார், வீச்சரிவாளை சுழற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது கடலூர் பில்வாலி தொட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா, விக்னேஷ் ஆகியோர் என்பதை கண்டுபிடித்தனர். அதையடுத்து சூர்யாவைக் கைதுசெய்ய போலீஸார் முயற்சி செய்தபோது, அங்கிருந்து தப்பியோடிய அவர், கீழே விழுந்தார். அப்போது அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரைக் கைதுசெய்த போலீஸார், சிகிச்சைக்காக அவரை கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 1-ம் தேதி சூர்யாவுக்கு பிறந்தநாள் என்பதால், மருத்துவமனைக்கு கேக் வாங்கிச் சென்றிருக்கிறார், அவரின் மனைவி. அந்த கேக்கை மருத்துவமனையின் படுக்கையிலேயே வெட்டி, சூர்யா பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதேசமயம், பலத்த பாதுகாப்பில் இருக்கும் ஒரு கைதி, மருத்துவமனையிலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தால் போலீஸார் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.

ராஜாராம்

இந்த வீடியோ விவகாரத்தை அறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், கைதி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்தது. அதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் சாந்தகுமார், ஆயுதப்படை காவலர்கள் வேல்முருகன், கவியரசன் போன்றவர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் ராஜாராம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.