`போதைப்பொருள் பார்சல்; உங்க பெயர்தான் இருக்கு!’ - முதியவரை மிரட்டி ரூ.1.8 கோடியை பறித்த கும்பல்
`வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்திருப்பதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும், கைது செய்துவிடுவோம்’ என்று கூறி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. மும்பையில் அது போன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது.
மும்பை தென்பகுதியில் வசிக்கும் 76 வயது முதியவருக்கு கடந்த மார்ச் மாதம் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், `உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மியான்மருக்கு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டு இருப்பதாக’ குறிப்பிட்டார். `அந்த பார்சலில் 150 கிராம் எம்.டி போதைப்பொருள், 4 கிலோ துணி, 20 போலி பாஸ்போர்ட் மற்றும் ஒரு லேப்டாப் இருப்பதாக’ அந்த நபர் குறிப்பிட்டார். ஆனால் அந்த பார்சலை தான் அனுப்பவில்லை என்று முதியவர் தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த கூரியர் கம்பெனி அதிகாரி, `இக்குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும், `முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்’ என்றும் மிரட்டினார். இப்பிரச்னைக்கு தீர்வு காண பணம் கொடுத்து சரி செய்யலாம் என்று தெரிவித்தார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த முதியவர் தான் போலீஸில் புகார் செய்யப்போவதாக தெரிவித்து வைத்துவிட்டார்.
உடனே மீண்டும் போன் செய்த மர்ம நபர் போனை வேறு ஒருவரிடம் கொடுத்து பேசச்சொன்னார். அந்த நபர் தான் லக்னோ போலீஸ் அதிகாரி என்றும், இந்த வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று என்றும், இதில் சைபர் பிரிவு போலீஸார் தலையிடுவார் என்று மிரட்டினார். அதோடு அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றினார். அந்த நபர் தன்னை சி.பி.ஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு முதியவரிடம் பேசினார். அந்த நபர் முதியவரிடம் டெலிகிராம் செயலி முலம் தொடர்பு கொள்ளும்படி கூறினார். அதோடு தனிப்பட்ட விபரங்கள், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பகிரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு பகிரவில்லையெனில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டினார். போலி சி.பி.ஐ அதிகாரியின் தொடர் மிரட்டலால் முதியவர் தனது பிக்சட் டெபாசிட்டிலிருந்து ₹.1.8 கோடியை போலி சி.பி.ஐ அதிகாரி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார்.
மார்ச் 21-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரை இப்பணத்தை அனுப்பினார். பணம் அனுப்பபட்டவுடன் டெலிகிராம் குரூப்பில் இருந்து முதியவர் நீக்கப்பட்டார். அதன் பிறகுதான் முதியவருக்கு இது மோசடி என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


