Mammootty: என் வயநாடு மக்கள் மீள ஆதரவு தாருங்கள்! - ஃபிலிம்பேர் விருது விழாவில் மம்மூட்டி உருக்கம்
2024ம் ஆண்டுக்கான 19வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுகள் மம்மூட்டி - நண்பகல் நேரத்து மயக்கம் (மலையாளம்), சித்தார்த் - சித்தா (தமிழ்), நானி - தசரா (தெலுங்கு) மற்றும் பூர்ணச்சந்திர மைசூர் - ஆர்கெஸ்ட்ரா மைசூரு (கன்னடம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எழுதி, இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்மூட்டி. இப்படம் திரையரங்குகளில் வெளியானபோதே பலரும் மம்மூட்டியின் நடிப்பை வியந்து பாராட்டியிருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்காக 2023ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றார் மம்மூட்டி.
நடிகர் விக்ரம் மற்றும் நடிகர் சித்தார்த்தின் கைகளால் விருதைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய மம்மூட்டி, "இது என்னுடைய 15வது ஃபிலிம்பேர் விருது. மலையாளம், தமிழ் இரண்டும் கலந்து எடுக்கப்பட்ட நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக இவ்விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்படத்தை நானே தயாரித்திருப்பது கூடுதல் ஸ்பெஷல். இந்த நேரத்தில் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
View this post on InstagramA post shared by Filmfare (@filmfare)
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டியது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நிலச்சரிவு பேரிடரால் என் மக்கள் வயநாட்டில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். நீங்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்கள் இழந்த வாழ்வை மீட்கச் செய்ய உதவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


