`குழந்தையை தத்தெடுக்க உதவினாங்க’ -எம்.பி கனிமொழிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றிசொன்ன மாற்றுத்திறன் தம்பதி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்மயில். இவரின் மனைவி பேபி. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. வேல்மயில், பெட்ரோல் பங்க் நிலையத்தில் வேலை செய்கிறார். பேபி, ஒரு தனியார் மதிய உணவு மையத்தில் அமைப்பாளராக உள்ளார். இவர்கள் தற்போது வேல்மயிலின் பெற்றோருடன் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என, குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் முடிவெடுத்து, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி மையத்தில் கடந்த 2020-ல் குழந்தையைத் தத்தெடுக்கப் பதிவு செய்தனர் இந்தத் தம்பதி. பதிவிற்குப் பின்பு, ஒரு சமூகப்பணியாளர், அவர்களின் இல்லத்திற்குச் சென்று Home Study (குழந்தை வளர்ப்புக்கான சூழல் இருக்கிறதா என்று பார்ப்பது) பரிசோதனை செய்து, ’குழந்தையை வளர்ப்பதற்குத் தகுதி உடையவர்கள்’ என சான்றிதழ் அளித்துள்ளார். எதிர்பார்ப்புப் பட்டியலில், மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், இத்தம்பதி கடந்த மார்ச் மாதத்தில் தங்கள் விண்ணப்பத்தைப் புதுப்பித்தனர். புதுப்பித்தல் முடிந்ததும் மேலும் ஒரு ஹோம் ஸ்டடி மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் தத்தெடுப்பிற்கு பதிவு செய்து, மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் உட்பட அனைத்து அசல் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். புதுப்பிப்பு செயல்முறையின் போதும் அதே செயல்முறையை மேற்கொண்டனர். அதிகாரிகளும், மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தின் (CARA) எந்த வரையறைகளும், அவர்களின் உடல்நிலை குழந்தையைத் தத்தெடுக்க ஒரு தடையாக இருக்கும் என்று குறிப்பிடவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் பிறந்த ஒரு குழந்தையைத் அவர்களுக்குத் தத்துக்கொடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 12-ம் தேதி CARA-விலிருந்து வேல்மயிலின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெற்றுள்ளார்.

’குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை 48 மணிநேரத்தில் உறுதிப்படுத்துங்கள்’ என்று கேட்டுள்ளனர். அவர்களும் ’ஆம்’ என உறுதிப்படுத்தினர். அதன்பிறகு, தத்தெடுப்பு குழுவிடம், அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு சுகாதார சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர், ’இத்தம்பதி குழந்தையைத் தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவக் குழுவின் தலைவரின் இறுதிப் பரிந்துரையில், இருவரும் மாற்றுத்திறனாளிகள் ஆனாலும் தத்தெடுத்த பிறகு குழந்தையைப் பராமரிக்க முடியும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தம்பதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள ஒரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் நான்கு மாதக் குழந்தையைத் தத்தெடுக்கச் சென்றார்கள். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு, மருத்துவக் குழு தாலிவரின் இறுதி பரிந்துரையைப் புறக்கணித்து, எலும்பு சிகிச்சை நிபுணரின் கருத்தை மட்டுமே கருத்தில்கொண்டு விண்ணப்பத்தை நிராகரித்தது.

குறிப்பாக, குழந்தையின் முதல் இரண்டு ஆண்டுகளில், மாற்றுத்திறன் தம்பதியால் அதை பராமரிக்க முடியாது என்று கூறி நிராகரித்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவின் தலைவர், இந்த தம்பதி குழந்தையைக் கவனிக்க முடியும் என்று பரிந்துரை செய்த போதிலும், அக்குழு நிராகரித்துள்ளது. இதனால் அந்த தம்பதியின் நம்பிக்கை நொறுங்கிவிட்டது.
நான்கு ஆண்டுகள் காத்திருந்த பின்னரும், நான்கு மாத குழந்தையைத் தத்தெடுக்க முடியாமல் தவித்துவந்தனர். இது, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, மாற்றுத்திறனாளி தம்பதியைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும், ’எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு உதவி செய்கிறோம்’ என்று உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 9-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தம்பதியை மறுபரிசோதனை செய்த மருத்துவர்கள், ’குழந்தையை வளர்ப்பதற்கு இவர்கள் 100% தகுதி உடையவர்கள்’ என சான்றிதழ் வழங்கியுள்ளனர். அந்த சான்றிதழை மின்னஞ்சல் மூலமாக CARA-வுக்கு அனுப்பி உள்ளனர். தம்பதி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்பு, குழந்தை இறுதியாக வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள ஒரு சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தார், பெண் குழந்தையை வேல்மயில் தன் பெற்றோர்களின் உதவியுடன் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டு, கடந்த 23-ம் தேதி மாலை 5 மணிக்கு குழந்தையை ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், தாங்கள் குழந்தையைத் தத்தெடுக்க உதவிய எம்.பி கனிமொழியை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி கூறினர் அத்தம்பதி.
தம்பதியிடம் பேசினோம். “எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் மனம் தளராமல், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினோம்.

ஆனால், எங்களால் குழந்தையை வளர்க்க முடியுமா என்ற கோணத்திலேயே அனைத்து அதிகாரிகளும் பார்த்தனர். எங்களின் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமாக குழந்தையைத் தத்தெடுக்க உதவிடுமாறு கனிமொழி மேடத்திடம் கூறினோம். அவரும், குழந்தையைத் தத்தெடுக்க எல்லா உதவிகளையும் செய்தார். அவரிடம் நாங்கள் உறுதியளித்தபடியே, இந்தக் குழந்தையை நாங்கள் பெற்றெடுத்த குழந்தையாக நினைத்து நல்ல படியாக வளர்த்துப் படிக்க வைப்போம்” என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


