ஆளும் வர்க்கம் கல்லா கட்டுவதற்காக கடலுக்கு தாரை வார்க்கப்படும் காவிரி நீர்… கருகும் டெல்டா..!

அதிகார வர்க்கத்தின் அயோக்கியத் தனங்களுக்கு என்றுமே அளவிருப்பதில்லை. அவர்கள் நினைப்பதுதான் எப்போதுமே சட்டமாக இருக்கிறது. ஒவ்வொருமுறையும் எளிய மக்களான விவசாயிகள் வயிற்றில் அடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் அவர்கள், காவிரி நீர் விவகாரத்திலும் அதையே செய்திருக்கிறார்கள். இவர்கள் கோடி கோடியா பணத்தைச் சுருட்டுவதற்காக டெல்டாவின் கடைமடை விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.

கல்லணை

கல்லணையில் என்னதான் நடக்கிறது...? 

டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்படி சரியான நேரத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால்தான் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். 

ஆனால், இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் வழக்கமான பிடிவாதம் காரணமாக மேட்டூர் அணைக்கே தண்ணீர் வரவில்லை. கர்நாடகம் கைவிரித்தாலும், இயற்கை நம்மை கைவிடவில்லை. ஜூலை மாதத்தில் கர்நாடகத்தில் அதீத மழை பெய்தது. இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது கர்நாடக அரசு. கர்நாடக அணைகளில் இருந்து லட்சக்கணக்கான கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், இரண்டு... மூன்று நாள்களிலேயே மேட்டூர் அணை நிறைந்துவிட்ட நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்தார்கள். 

``தண்ணீர் வந்துவிடும்’’ என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் வெள்ளாமைக்கு தயாரானார்கள் கடைமடை டெல்டா விவசாயிகள். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? மேட்டூர் அணையிலிருந்து வந்த மொத்த நீரையும் கொள்ளிடம் ஆற்றில் மட்டுமே திறந்துவிட்டு, மொத்தமாகக் கடலுக்கு அனுப்பிவிட்டார்கள். காவிரியில் நீர் கரைபுரண்டோடும் நிலையிலும், சீரமைப்பு பணிகளால் கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் காவிரி, கல்லணைக்கால்வாய் மற்றும் காவிரியிலிருந்து பிரியும் வெண்ணாறு ஆகிய நதிகள் மூலம் விவசாயம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக  நீர் திறப்பது தடைபட்டிருக்கிறது.

கான்கிரீட் பணிகள்

காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகியவை மிக முக்கியமான நதிகள். இவற்றிலிருந்து ஆயிரக்கணக்கில் சிற்றாறுகள், கால்வாய்கள், ஓடைகள்  நரம்பு மண்டலம்போலப் பிரிந்து டெல்டாவைச் செழிப்படைய வைக்கின்றன. நரம்பு மண்டலமாக இருக்கும் இந்த நீர்ப்பாசன தடங்களை, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பணமழை பொழியும் அட்சய பாத்திரமாக பார்க்கிறார்கள் என்பதுதான் இதில் பிரச்னையே... 

கல்லணைக் கால்வாயின் கரைகளை பலப்படுத்துகிறோம்... கதவணைகளை புதுப்பிக்கிறோம் என்று அண்மையில்  447 கோடி ரூபாயில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இதேபோல காவிரி, வெண்ணாறு ஆகியவற்றிலும் அவற்றிலிருந்து பிரியும் சிற்றாறு மற்றும் கால்வாய்களிலும் சிறு பாலங்கள் தொடங்கி பெரிய பாலங்கள் கட்டிக் கொண்டுள்ளனர். ஆங்காங்கே தூர் வாருகிறேன் என்கிற பெயரில் ஒரு பக்கம் பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம் கரைகளைப் பலப்படுத்துகிறேன் என்று ரிவிட்மென்ட் பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.  இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆங்காங்கே  மணல்  திருட்டும் ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்துக்கு கோடி கோடியாக பணமழை பெய்துகொண்டிருக்கிறது. 

கான்கிரீட் பணிகள்

இந்தநிலையில், விவசாயிகள் நலன் கருதி தண்ணீரை திறந்துவிட்டால், அவர்கள் பணியை முடிக்க முடியாது... பில் போட முடியாது... மணலைத் திருட முடியாது...  பணத்தை மூட்டைக் கட்ட முடியாது. இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும்போது, விவசாயம் வாழ்ந்தால் என்ன... மண்ணாய் போனால்தான் அவர்களுக்கு என்ன?’ என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்...

நானும் டெல்டாக்காரன் என்று முண்டா தட்டும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தன்னுடைய அடிப்பொடிகள் நடத்தும் இந்தக் கொள்ளை எதுவுமே தெரியாது. ராஜராஜசோழன் என்று அவருடைய தொண்டர்கள் அடிக்கும் போஸ்டரிலிருக்கும் வாசகங்களுக்காவது, அந்த பொன்னியின் செல்வனைப் போல காவிரியைச் செழிக்க வைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் எங்கே அவருக்கு நேரமிருக்கப் போகிறது.

சரி இந்தக் கொள்ளையைப் பற்றியும்... இதனால் டெல்டாவின் விவசாயமே பாழாய்ப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றியும் தி.மு.க-வின் கூட்டாளிகளும். விவசாயத் தோழர்களுமான கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாதா? திருமாவளவனுக்குத் தெரியாதா? வைகோவுக்குத் தெரியாதா? ஆனால், கூட்டாளிகளாயிற்றே எப்படி குரல் கொடுக்க முடியும்?

மேட்டூர் அணை

சரி, எதிர்க்கட்சி... எதிரிக்கட்சி என்றிருக்கும் அ.தி.மு.க. பிஜே.பி, நாம் தமிழர், பா.மாக. இவர்களும்கூட  கொள்ளிடத்தில் பாய்ந்து கடலுக்குப் போய்க் கொண்டிருக்கும் காவிரி நீர் பற்றி வாயையையே திறக்கவில்லை. ஒருவேளை... காவிரி நீர்த்தடங்களில் நடந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளை உள்ளிட்ட அனைத்திலும் இந்தக் கட்சிக்காரர்களுக்கும் பங்கு போய்க் கொண்டிருக்கிறதோ என்னவோ?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.