சென்னை: ரூ.40,000 கடன்; பெற்ற மகளைப் பாலியல் தொழிலுக்குத் தள்ளிய `படுபாதக தாய்!

வடசென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீஸாரிடம், ``சார், என்னுடைய அம்மாவே என்னை பாலியல் தொழிலுக்கு தள்ளுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்" என கண்ணீர் மல்க கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். பின்னர் சிறுமி அளித்த தகவலின்படி சிறுமியின் அம்மா ராதிகா (பெயர் மாற்றம்), வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துலட்சுமி (32). முத்துலட்சுமியின் கணவர் நிஷாந்த் (37), புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித்குமார் என்கிற ஸ்பீடு அஜித் (20), வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர் (22), காவாங்கரையைச் சேர்ந்த மகேஸ்வரன் (24) ஆகிய ஆறு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பணம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமியின் அம்மா ராதிகா, தனக்குத் தெரிந்த வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை ராதிகாவால் திரும்ப கொடுக்க முடியவில்லை. அதனால் பணத்தை திரும்ப கேட்டு ராதிகாவிடம் முத்துலட்சுமி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் கடனுக்குப் பதிலாக ராதிகாவின் 16 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு தன்னோடு அழைத்துச் சென்றிருக்கிறார் முத்துலட்சுமி.

இதையடுத்து கொடுத்த கடனை வசூல் செய்ய திட்டமிட்ட முத்துலட்சுமி, ராதிகாவின் மகளான அந்தச் சிறுமியை மிரட்டி அவரை பாலியல் தொழிலுக்கு தள்ளியிருக்கிறார். இந்தத் தகவல் சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்த போதிலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுமியை அவரின் அம்மா ராதிகாவிடம் முத்துலட்சுமி ஒப்படைத்துவிட்டு சென்றார். இதையடுத்து உடல் நலம் தேறியதும் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட ராதிகா, தன்னுடைய மகளை மீண்டும் முத்துலட்சுமியிடம் ஒப்படைக்க முயற்சி செய்திருக்கிறார்.

கைது

அதனால் அந்தச் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டார். ஆனாலும் சிறுமியின் அம்மா ராதிகா போன் மூலம் தன்னுடைய மகளை தொடர்பு கொண்டு பாலியல் தொழிலுக்கு தள்ள முயற்சி செய்து வந்திருக்கிறார். அதனால் மனமுடைந்த சிறுமி, காவல் நிலைத்தில் புகாரளித்ததும் அவரை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கும்பல் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் கைதாகியிருக்கும் முத்துலட்சுமியும் அவரின் கணவரும் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இதில் சிறுமியை காதலிப்பது போல நடித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். அதனால் அவரையும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்த்திருக்கிறோம். சிறுமிக்கு போதிய கவுன்சலிங் கொடுத்ததோடு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறோம். சிறுமியின் குடும்பத்தினரே இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதால் அவரை காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.