டிவி சேனல் மாற்றுவதில் அண்ணனுடன் தகராறு; விபரீத முடிவெடுத்த 14 வயது சிறுவன் - திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் காவங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவருக்கு யுவன்சங்கர் (16), மணிரத்தினம் (14) ஆகிய இரண்டு மகன்கள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு கால தாமதமாக வருவது வழக்கம். மகன்கள் இருவரும் மப்பேடு அருகே தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

ரிமோட்

இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்று பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்திருக்கின்றனர். வழக்கம்போல வீட்டில் இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். மணிரத்தினம் நாடகம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது யுவன்சங்கர் தம்பியிடமிருந்து டிவி ரிமோட்டைப் பிடுங்கி, கிரிக்கெட் சேனல் வைத்திருக்கிறார். இதனால் டிவி சேனல் மாற்றுவது தொடர்பாக இருவருக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த மணிரத்தினம், வீட்டிற்கு பின்னால் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது போன்ற சண்டை வழக்கமாக நடக்கும் என்பதால் யுவன்சங்கர், தம்பி மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார் என தொடர்ந்து டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இரவு நேரமாகியும் தம்பி வீட்டுக்கு வராததை அறிந்து, யுவன்சங்கர் வீட்டுக்கு பின்னால் சென்று பார்த்தபோது புளிய மரத்தில் தம்பி மணிரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு துடிதுடித்திருக்கிறார்.

காவல்துறை

அதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மணிரத்தினத்தின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிரத்தினம் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மருத்துமனை வளாகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கடம்பத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. உடற்கூறு ஆய்வு முடிந்த பின் மணிரத்தினம் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டிவியில் சேனல் மாற்றுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடம்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.