திருப்பத்தூர்: சுற்றும்போதே சாய்ந்த ராட்டினம்; அலறிய குழந்தைகள்... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருப்பத்தூர் அருகே ராட்சத ராட்டினம் திடீரென சாய்ந்ததால், கோயில் திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் அருகேயுள்ள பசலிக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவைக் காண, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் பலர் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு கோயில் அருகேயுள்ள மைதானத்தில் 3 ராட்சத ராட்டினங்கள் பொழுதுபோக்கிற்காக பொருத்தப்பட்டிருந்தன. நேற்று இரவு 8 மணியளவில் 16 கூண்டுகள் கொண்ட ராட்சத ராட்டினம் ஒன்றில், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, வேகமாக சுற்றிக் கொண்டிருந்த ராட்டினத்தில் திடீரென நடுவே இருந்த போல்டு உடைந்தது. இதனால் ராட்டினம், அதிக இரைச்சலுடன் தாறுமாறாகச் சுற்றி நான்கடி அளவில் சாய்ந்து நின்றது.

அப்போது ராட்டினத்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம், அருகே இருந்தவர்களின் கூச்சல் என அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து ராட்டினத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும், பெண்களையும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

அப்போது, ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட தனது தாயின் அலறலைக் கேட்டு, கீழே நின்றிருந்த 12 வயது சிறுமி ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இரவு நேரம் என்பதால் ராட்டினம் கழற்றுவதில் சிரமம் என்பதால், கயிறு மூலம் சாய்ந்த ராட்டினத்தை கீழே விழாதவாறு‌ கட்டிவைத்தனர்.இதையடுத்து 3 ராட்சத ராட்டினங்கள் உள்பட அனைத்து விளையாட்டு உபகரணங்களும் நிறுத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட ராட்சத ராட்டினத்தின் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். ஒருவேளை ராட்டினம் சாய்ந்து கீழே விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என, அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.