இந்த மண்ணிற்கும் மனிதனுக்கும் பயனுற்று வாழ வேண்டும் - செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார்

மரங்களை யாராவது அவர், இவர் என்று மரியாதையுடன் மிக அன்பாக கூறி பார்த்துள்ளீர்களா? ஆனால் மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் என்பவர் ஒவ்வொரு மரங்களையும் மனிதர்களைப் போலவே பார்க்கிறார்.

இவர் பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெறும் ஒவ்வொரு பதக்கத்திற்கும் ஒவ்வொரு மரக்கன்று நடவு செய்கிறார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும், பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்ததைக் கொண்டாடும் விதமாக சுற்றுச்சூழல் பூங்காவில் பூவரச மரக்கன்று நடவு செய்துள்ளார். மேலும் ஜூலை 30-ஆம் தேதி 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சுரஞ்ஜோத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றதைக் கொண்டாடும் விதமாக வேப்ப மரக்கன்று நடவு செய்தார்.

ஜி.அசோக்குமார்

இதுபோன்று ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் ஒவ்வொரு மரக்கன்று நடவு செய்யவிருப்பதாக அசோக்குமார் கூறுகிறார். மேலும் இதில் அவருடைய ஐந்தாம் வகுப்பு பயிலும் மகன் சுதர்சன் உடனிருந்து அனைத்து நடவுப் பணிகளையும் செய்கிறார்.

இது குறித்து பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் கூறியதாவது: " நான் எனது பள்ளி கல்லூரி பருவத்தில் இருந்தே பொது சேவையில் ஈடுபட தொடங்கிவிட்டேன். பசுமை சார்ந்த என்னுடைய பயணம் கல்லூரியில் இருந்து தான் தொடங்கினேன். பொது இடங்கள், அரசுப் பள்ளிகள், பூங்கா போன்ற இடங்களில் என்னால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடவு செய்கிறேன். நான் மட்டும் செய்யாமல் அப்பகுதியைச் சுற்றி உள்ளவர்களையும் மரக்கன்றுகளை நடவு செய்ய ஊக்குவிக்கின்றேன். நான் தண்ணீர் கேன் போடும் தொழில்தான் செய்கிறேன். அதனால் என்னால் இயன்ற அளவிற்கு மரக்கன்றுகளை நடுகிறேன்.

ஜி.அசோக்குமார்

ஒரு சிறந்த பசுமை செயற்பாட்டாளன், எதை மிகவும் விரும்பி விதைக்க ஆசைப்படுவான் என்றால் அது பனை விதைகள் தான்.ஏனெனில் அதில் தான் உச்சியில் இருந்து வேர் வரை மண்ணிற்கும் மனிதருக்கும் பயன் தரும் கிழங்கு, தவுன், மட்டை, மரம், ஓலை, கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற நிறைய பொருட்கள் நம்மால் பெற முடியும். ஒருவர் இறந்தாலும், ஒருவர் வெற்றி பெற்றாலும், தலைவர்களுடைய பிறந்தநாள், நினைவு நாள்,, நான் சந்தோஷமாக இருந்தாலும் நான் மரக்கன்று நடுவேன். எனக்கு தேவை ஏதாவது காரணத்தினால் மரக்கன்று நட வேண்டும். அரசு சார்பில் 2023ல் எனக்கு பசுமை சாம்பியன் என்ற விருதையும் ரூபாய் ஒரு லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. நான் பாரம்பரிய மரமான நீர் கடம்பம், நீர் மருதம், மகிழம், இலுப்பை, பனை விதை, வேம்பு, அரச, பெருநெல்லி மரம், புங்கை மரம், பூவரச மரம் போன்ற மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறேன். ஒடிந்து, பிடுங்கி, வாடி இருக்கும் செடிகளை மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு வருவதை செய்து வருகிறேன். பலர் என்னை கேலி செய்துள்ளனர்.

`சிறு தொழில் செய்யும் உனக்கு ஏன் இந்த வேலை, பணம் வீணாகும்.விளம்பரம் செய்வதற்கு தானே இவ்வாறு செய்கிறாய் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர் ஆனால் என்னுடைய தீராத பற்றால் நான் இதை தொடர்ந்து செய்து வருகிறேன். இனியும் செய்வேன். பனப்பழங்களை கொண்டு பொம்மைகளை செய்வதில் என்னை முதன் முதலில் வெளியுலகிற்கு கொண்டு வந்தது விகடன் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

ஜி.அசோக்குமார்

நான் இச்சேவை மட்டும் அல்லாது அரசு பள்ளிகளில் மற்றும் பிற இடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பனை விதைகளை தயாரிக்க மற்றும் பனப்பழங்களை கொண்டு பொம்மைகளை செய்யும் பயிற்சி அளித்தல், போன்ற பணிகளை இளம் விவசாயிகள் குழு என்ற பெயரில் செய்து வருகிறேன். இன்று இளைஞர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், உங்களால் இயன்ற அளவு பனை விதைகளை விதையுங்கள்" என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.